Saturday, January 29, 2022

ஸ்ரீ பகவத் கீதை : சில சிந்தனைகள்

 ஆறு எண்ணிக்கை உள்ள தொகுதிக்குப் பெயர் ஷட்கம். ஸ்ரீ பகவத் கீதையை, மொத்தம் 18 அத்யாயங்களின் கணக்கையே மூன்று ஆறு என்று யோசித்துப் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. முதல் ஆறு முதல் ஷட்கம். நடு ஷட்கம் நடுவில் ஆறு. அதாவது அத்யாயம் 7 முதல் அத்யாயம் 12 வரை. கடைசி ஆறு அத்யாயம் 13 முதல் அத்யாயம் 18 வரை என்று மூன்று ஷட்கங்கள் என்று பிரித்துப் பார்த்துப் பொருள் சிறப்பு தருகிறார் ஸ்ரீராமானுஜர். முதல் ஷட்கத்தால் (ஆறு அத்யாயங்களால்) ஆத்மாவின் உண்மையான இயல்பு புரிந்துகொள்ளப் படுகிறது. 

இப்பொழுது சில கேள்விகளைக் கேட்போம். அர்ச்சுனன் போர் புரிவதில் ஆர்வத்துடன் இருந்தான். போர்க்களம் வந்ததும் நெருங்கிய உறவினர்களைப் பார்த்துவிட்டுப் பாசத்தில் கலங்கிப் போரே வேண்டாம் என்று சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான். அவனுக்குப் போர். நமக்கோ அன்றாடப் பிரச்சனைகள். போதாதென்று அவ்வப்பொழுது முளைக்கும் சிக்கல்கள். இதில் திடீரென்று வாழ்க்கைக்கு என்ன பொருள் என்று நடு இரவில் முழிப்பு தட்டியது போல் சில சமயம் திக்பிரமை பிடித்தது போல் சிந்தனைகள். ஓடுகிற ஓட்டத்தில் நடுவில் பிரேக்டௌன் போல் வண்டியே உட்கார்ந்துவிடும் கட்டங்கள். அர்ச்சுனனுக்கு வாழ்வில் என்றோ ஒரு நாள்தான் கலக்கம். நமக்கோ தினம் தினம். சரி விஷயத்திற்கு வருவோம். அர்ச்சுனனுக்குக் கலக்கம். அவனை மீண்டும் போர் புரிய வைக்க வேண்டும். அவ்வளவுதானே! ஏன் அதற்கு இவ்வளவு பெரிய தத்துவ சாத்திர யோக உபதேசம் எல்லாம்? ஒரு வேளை ஏற்கனவே எழுதி வைத்திருந்த சாத்திரத்தை வேத வியாசர் இந்தக் கட்டத்தில் வைத்து பப்ளீஷ் செய்கிறாரா? என்று தோன்றும். 

ஒன்றை நாம் மறந்துவிடுகிறோம். அர்ச்சுனன் ஓர் அரசன். அவனுக்குப் போர்க்களம், கத்தி, வெட்டு, படையெடுப்பு, எதிரிகளின் தாக்கல், உயிர் அபாயம், பிற உயிர்களை எடுக்கும் போது அந்த ஜீவனின் அலறல், வாழ்க்கையின் நிலையின்மை, மரணம், மரணத்திற்குப் பிந்தைய நிலை என்ன, இந்த ஜீவன் இருக்கிறதா இல்லையா - இது போன்ற கேள்விகள் நமக்கு எப்பொழுதாவது தோன்றக் கூடிய கேள்விகள். ஆனால் அரசர்களுக்கு இவை அன்றாட யதார்த்தம். அதாவது இந்தப் பிரச்சனைகள் அவர்கள் மனத்தில் எழுந்து அவர்களை திக்குமுக்காட வைத்துக்கொண்டே இருக்கும். அவர்களின் மனம் எப்பொழுதும் அமைதியில் கூடத் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டே இருக்கும். ஒரு விதத்தில் பார்த்தால் ஐயோ பாவம் வாழ்க்கைதான் அரசர்களின் வாழ்க்கை. அவர்கள் அப்படிப்பட்ட சிரமங்களைப் படுவதில்தான் சாதாரண மக்களின் அன்றாடம் அமைதியாக ஓடுகிறது. 

எனவே அர்ச்சுனனின் உள்கஷ்டம் என்ன என்பது ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நன்றாகவே தெரியும். எத்தனையோ நாள் அவனும் ஸ்ரீ கிருஷ்ணனை எத்தனை தத்துவக் கேள்விகள் எல்லாம் கேட்டிருப்பான். இப்பொழுது அத்தனையும் சேர்ந்து வண்டி குடை சாய்ந்துவிட்டது. அவனுக்குச் சொல்லும் போது உங்களுக்கு எனக்கு எல்லாம் சொல்வது போல் பொதுப்படச் சொல்ல முடியாது. பிரச்சனையின் கிழங்கைக் கெல்லி எடுத்தால்தான் பள்ளத்திலிருந்து சக்கரம் நகரும். இது ஸ்ரீகிருஷ்ணனுக்கு நன்கு தெரியும். எனவேதான் இவ்வளவு தத்துவ விளக்கம். இது நமக்குப் பொழுது போக்கு. ஆனால் அரசர்கள் வாழ்வில் மரணமும், மரணத்தின் பிந்தைய நிலை பற்றிய கவலையும் அன்றாடம் தலைதூக்கும் திகில் பிரச்சனைகள். எனவே ஸ்ரீ கிருஷ்ணன் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு உரையாடலாகச் சொன்ன உபதேசம்தான் கீதை என்பது பொருத்தமே. 

வரலாற்றில், பாரசிக மன்னனால் சிறைபடுத்தப்பட்ட குரோஸ மன்னன் தீ நடுவில் கட்டி நிறுத்தப்பட்டுத் தண்டனைக்குக் காத்திருக்கிறான். தகிக்கிறது உஷ்ணம் சுற்றிலும். அப்பொழுது என்றோ கிரேக்க முனிவன் ஸோலோன் தனக்குச் சொல்லிச் சென்ற உபதேசம் நினைவுக்கு வர குரோஸ மன்னன் பெரிதாகச் சிரிக்கிறான். சாகப் போகிறவன் இப்படிச் சிரிக்கக் காரணம் என்ன என்று அறிய அவனை கட்டவிழ்த்து அமர வைத்துக் கேட்கிறான் பாரசிகன். ஸோலோன் என்னும் முனிவன் தனக்குக் கூறிய தத்துவ உபதேசத்தைக் கூறுகிறான் குரோஸன். இருவரும் நட்பாகி விடுகின்றனர். தீயின் நடுவில் தத்துவச் சிந்தனையா என்று நமக்குப் புரியாது அந்த அரசர்களின் அவஸ்தைகள். நம்முடையது சராசரி செட்டுச் சிக்கனமான வாழ்வு. எல்லாம் பொழுதுபோக்கு. சௌகரியம் என்ற பொந்திற்குள் நம் அன்றாடம் ஓடுகிறது. திடுக்கிடும் நிச்சயமின்மைகள் சூழத்தான் அரசர்களின் ஒவ்வொரு கணமும் நகர்கிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

1 comment:

  1. ஸ்வாமி சத்விஷயங்களை இவ்வளவு லகுவா எல்லாரும் அந்வயிக்கிற‌மாதிரி செய்திருப்பது ரொம்ப விசேஷமாக இருக்கு.மங்களானிபவந்து����

    ReplyDelete