Tuesday, January 25, 2022

ஸ்ரீ பகவத் கீதை : அறிவுதான் வழி

 பாவம்! கலக்கத்தில் சோர்ந்துபோய்க் கீழே உட்கார்ந்துவிட்ட அர்ச்சுனனைக் கருணையுடன் பார்த்தான் ஸ்ரீகிருஷ்ணன். எத்தனை பெரிய வீரன்! பாசத்தால் அடிபட்டுச் செயல்பட முடியாமல் இருக்கிறான்! 

‘என்ன அர்ச்சுனா! இந்த நேரம் பார்த்து உனக்கு ஏன் இப்படிக் கலக்கமும், நடுக்கமும் வந்ததப்பா? நீ வீரன் அல்லவா? வாழ்க்கையில் ஒரு சூழ்நிலை என்று வந்துவிட்டால் பிறகு நம்மவர் பிறர், பாசம் என்றா பரிதவிக்கமுடியும்? உணர்ச்சிகளையெல்லாம் அகற்றி வைத்துவிட்டு அந்த நேரத்தில் நம் கடமை என்னவோ அதைத்தானே அமைதியாகச் செய்துகொண்டு போக முடியும்? இல்லை நீயே சொல்வதுபோல் ஓடிப் போய்விட்டால் எதிரே நிற்பவர்கள் என்ன உன் பாசத்தையா மெச்சுவார்கள்? இல்லை. நீ ஒரு கோழை. உனக்கு ஏதோ உள்நோக்கம். சொந்தலாபம். அதைக் கருத்தில் கொண்டு ஓடிவிட்டாய் என்றுதானே சொல்வார்கள். வா! எழுந்திரு! வீரனாக நின்று கடமையைச் செய். வெற்றியோ, தோல்வியோ அதெல்லாம் ஒரு பொருட்டில்லை.’ 

‘இல்லை கிருஷ்ணா! யாரெல்லாம் நிற்கிறார்கள் பார்! தாத்தா, எனக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்தவர்கள், என்னைத் தோளில் போட்டு வளர்த்தவர்கள், சிறுகுழந்தையிலிருந்து யார் பார்க்க நான் வளர்ந்தேனோ அவர்கள், இவர்களையெல்லாம் சண்டை போட்டு வென்று என்ன செய்யப் போகிறேன்! என் மனம் சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டது. ஒரே உள்ளே இருட்டிக்கொண்டு வருகிறது. என் இயல்பு முற்றிலும் அகன்றுவிட்டது. நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த நிலையில் நான் புரிந்துகொள்ள வேண்டும்? உன்னையே சரண் அடைகிறேன். நீதான் எனக்கு வழியைக் காட்ட வேண்டும்’ 

‘அர்ச்சுனா! அறிவாளியைப் போலப் பேசுகிறாய். ஆனால் அறிவாளியின் பார்வையில் பார்க்கமாட்டேன் என்கிறாய். கடந்து போவதைக் குறித்துக் கவலையில் ஆழ்வதும், இருப்பதைக் குறித்துப் பெரும் பரபரப்பு அடைவதும் அறிவாளியின் இயல்பு அன்று. எல்லாம் கடந்து போகும். நீ, நான், இந்த வீரர்கள் எல்லாம். இந்த உடம்பு என்ற விதத்தில் பார்த்தால் எதுவும் நிலைப்பதில்லை. ஆனால் ஆத்மா என்ற விதத்தில் பார்த்தால் விஷயமே வேறு. நீயோ, நானோ, இவர்களோ எல்லாம் முற்காலத்திலும் இருந்தோம்; இப்பொழுதும் இருக்கிறோம்; இனி வருங்காலத்திலும் இருக்கவே போகிறோம். தேகத்தில் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமை என்று மாறுவதைப் போல்தான் ஓர் உடலைவிட்டு மற்றோர் உடலுக்கு மாறுவதும். 

குளிர்ச்சி, உஷ்ணம், சுகம், துக்கம் என்ற இரட்டைகளைச் சமமாகக் கருதி நடந்துகொள்பவர் அம்ருதநிலையை அடைகின்றனர். 

இல்லை என்பது என்றும் இருக்கப் போவதில்லை. இருக்கும் ஒன்றோ என்றுமே இல்லாமல் போவதில்லை. மாறும் இவற்றுள் எல்லாம் மறைந்து நிற்கும் அந்த ஒன்று அழியாது. அழிக்கவும் முடியாது. 

அழிவற்றது, நிலையானது, எல்லையற்றதான இந்த ஆத்மா. ஆனால் தேகமோ ஒரு முடிவுக்கு வந்துவிடும். இந்த ஆத்மா பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை; இல்லாமல் இருந்து பிறகு புதிதாக உண்டானதுமில்லை. என்றும் தான் ஆத்மாவாகவே இருக்கிறது. எனவே எழுந்திரு. போர்புரி. 

உடுத்த துணியைக் களைந்து விடுகிறான் மனிதன். செயலோய்ந்த தேகத்தை உதறிவிட்டு மறுபிறவியை அடைகிறது உயிர். இந்த ஆத்மாவைக் கத்தி வெட்டாது; நீர் நனைக்காது; தீ சுடாது; காற்று உலர்த்தாது. எங்கும் இருப்பது; என்றும் இருப்பது; நகராது; நகர்த்தவும் முடியாது; இந்த ஆத்மா நித்யமானது. 

இந்த ஆத்மா வடிவம் கொள்வதில்லை; இதை மனத்தால் சிந்திக்க முடியாது; மாற்றம் எதுவும் இல்லாதது. இதை உள்ளபடி நீ அறிந்தால் துயரப்பட எதுவும் இல்லை. 

சரி ஒரு பேச்சுக்காக நீ இதைப் பிறப்பதாகவும், இறப்பதாகவும் உள்ள ஒன்று என்று கருதினால் அப்படியும் துயரப்படக் காரணமில்லை. பிறந்து இறந்து மாறும் இயல்புள்ள ஒன்றை நீ மாற்றவா முடியும்? 

இல்லை. தேகத்தோடு சம்பந்தப்பட்ட ஆத்மாவைக் குறித்து நீ நினைப்பாயானால் அப்பொழுதும் எதற்குத் துயரம்? ஆரம்பத்தில் வடிவம் இல்லாமல் இருந்த ஆத்மா பின்னர் தேகம் என்ற வடிவத்தில் வந்து பின்னர் மீண்டும் வடிவமற்ற நிலைக்கே போய்விடுகிறது. அதற்கு நீ என்ன செய்ய முடியும்? 

புரிந்துகொண்டால் சிலருக்கு இந்த ஆத்மா என்றால் ஆச்சரியம்! சிலருக்கோ இதன் வியப்பைச் சொல்லி ஓயாது. இதைப் பற்றிக் கேட்டுச் சிலருக்கு வியப்பு. ஆனால் சிலரோ இதைப் பற்றி எவ்வளவு கேட்டும் புரிந்துகொள்வதில்லை. 

ஆத்மாவின் தன்மை இதுவென்றால் வாழ்க்கையில் உன் நிலையில் என்ன உனக்குக் கடமையோ அதைச் செய்துகொண்டு போ. நீயோ ஓர் அரசன். அறவழியிலான போர் உனக்குக் கடமை. ஏன் கவலைப் படுகிறாய்? இறந்தபின் சுவர்க்கம் என்று நினைத்தாலும் அறவழியிலான போர்தானே ஓர் அரசனுக்குத் திறந்து வைத்திருக்கும் சொர்க்கவாசல்? அதை விட்டுவிட்டுக் கடமையில் தவறினால் உலகம் உன்னை இகழும். எதிரிகளுக்கோ நீ ஏளனப் பொருளாக ஆகிவிடுவாய். அதைவிட என்ன இழுக்கு சொல்? இறந்தால் சொர்க்கம். இருந்தால் வெற்றிவாகை. எனவே எழுந்திரு. போர்புரி. துன்பம், இன்பம்; லாபம் நஷ்டம்; வெற்றி தோல்வி; அனைத்தையும் சமம் ஆக்கு. போர்புரி. உனக்குப் பாபம் எதுவும் வராது. 

ஆத்மாவைக் குறித்த ஞானத்தை உனக்குச் சொன்னேன். யோகத்தைக் குறித்த அறிவையும் உனக்குச் சொல்கிறேன். அதைக் கைக்கொண்டால் கர்மபந்தங்களை அகற்றி விடுதலை அடைவாய். கர்மயோகம் என்னும் இதில் வீணானது எதுவும் இல்லை. சிறிதே இதை நீ கடைப்பிடித்தாலும் கூடப் பெரும் பயத்திலிருந்து உன்னைக் காப்பாற்றும். முனைப்போடு இருந்தால் புத்தி ஒன்றுதான். முனைப்பில்லாதவனுக்கோ பலப்பல புத்தி. 

கர்மயோகம் என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஆசைக்காகக் கர்மம் என்று வேதங்களில் சொல்லியிருக்கும் அலங்காரமான வார்த்தைகளைக் கண்டு ஈடுபடுபவனுக்கு ஆசை கொண்ட வழியெல்லாம் கர்மம் என்று ஆகிச் சொர்க்கம், இன்பம் என்று பிறவிக்கு மேல் பிறவி. வேதங்களில் மூன்று குணங்களுக்கும் உரிய விஷயங்களும் சொல்லப்பட்டிருக்கும். நீ குணங்களைக் கடந்த நிலைக்குப் போ. இரட்டைகளைக் கைவிட்டு, என்றும் சமமாக இரு. புதிது புதிதாக அடைவது, அடைந்ததைக் காப்பாற்றிக் கொள்வது என்னும் கவலையைக் கடந்து போ. ஆத்மாவை அறிந்தவனுக்கு வெள்ளத்தின் நடுவே கிணற்று ஜலம் போல்தான் வேதம். 

கர்மயோகம் என்பதில் கர்மாவை எப்படி எந்த மனநிலையில் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். கர்ம பலனால் ஒரு பயனும் இல்லை. பலன்களில் ஆசை வைத்துக் கர்மங்களில் ஈடுபடாதே. ஆனால் அதற்காக எந்தச் செயலும் செய்யாத சோம்பேறியாகவும் ஆகிவிடாதே. யோகத்தில் நிலைநின்று கர்மங்களைச் செய். பற்றை விடு. கிடைக்கிறது கிட்டவில்லை என்பதில் சமமாக இரு. சமத்வ மனநிலைதான் யோகம் என்று சொல்லப்படுவது. சமத்வபுத்தியுடன் செய்யப்படும் கர்மத்தை விட மிகவும் தாழ்ந்தது பலன் குறித்த ஆசையால் செய்யப்படும் கர்மம். சமத்வபுத்தியில் தோய்ந்து இரு. பலன் குறித்து அலைபவன் வெறும் கிருபணன். 

எனவே சமத்வபுத்தி என்னும் யோகவழியில் நிலைநின்று செயல் நன்மையாகுமா தீமையாகுமா என்னும் கவலையை விட்டுக் கர்மயோகம் என்னும் பாவனையோடு போர்புரி. கர்மங்களில் பற்றின்றி இங்ஙனம் சமத்வபுத்தியுடன் இயற்றும் திறமைதான் கர்மங்களில் குசலனாய் இருத்தல் என்னும் தன்மை ஆகும். 

இவ்வாறு சமத்துவபுத்தியோடு செயல் புரிதல் என்னும் கர்மயோகத்தில் நிலைநின்று நன்மதியாளராய் இருப்பவர்கள் கர்மங்களின் பலன்களில் பற்றை விடுத்துப் பிறவித்தொடராகிய பந்தத்தினின்றும் முழுதும் விடுபட்டு அழியாத நிலைக்குச் செல்கின்றார்கள். 

உன்னுடைய புத்தியானது மோகமாகிய அழுக்கு நீங்கப் பெற்றால் அப்பொழுது காதில் விழுந்தது, இனி விழப்போவது எதைக் குறித்தும் பதட்டப்படாத மனநிலையாகிய நிர்வேதம் என்பது உனக்கு உண்டாகும். 

காதில் விழும் பலவித அபிப்ராயங்களால் எத்துண்டு அலையும் உன்னுடைய புத்தியானது எப்பொழுது சமத்வம் என்பதில் நிலைபெற்று அசையாமல் இருக்குமோ அப்பொழுதே நீ கர்மயோகம் என்பதில் நிலைத்தவனாக ஆவாய். 

(இப்பொழுது அர்ச்சுனனுக்கு மனம் சற்றே அமைதியடைந்து தனக்கு ஏற்பட்ட மனப்பிரச்சனை என்ன என்று புரியத் தொடங்கியது. தன்னுடைய புத்தி சமத்துவபுத்தியாக நிலைபெறாமல் மோகமாகிய குற்றத்தால் அலைபாயும் ஒன்றாக இருந்திருக்கிறது என்று புரிந்தது. எனவே ஆர்வமாகக் கேட்கிறான்) 

‘கிருஷ்ணா! தன் பிரக்ஞையில் நிலைபெற்றவர், சமத்துவபுத்தியில் ஊன்றி நிற்பவர் என்பவர் எப்படிப் பேசுவார்? எப்படி நடந்துகொள்வார்? அவரைப் பற்றிய விவரணை என்ன? அசையாத மதிவாய்ந்தவரின் செயல் எப்படி இருக்கும்?’ 

‘அர்ச்சுனா! மனத்தில் உண்டாகும் காமங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் விட்டு ஆத்மா ஒன்றில் மட்டும் தன்னளவில் திருப்தியடைந்து இருப்பவன் அந்த நிலையில் பிரக்ஞையில் நிலைத்தவன் - ஸ்தித ப்ரக்ஞன் என்று சொல்லப்படுகிறான். 

துக்கத்தில் மனக்கஷ்டமும், சுகத்தில் நாட்டமும் இல்லாதவனாய், பற்று, பயம், சினம் ஆகியவற்றை அகற்றித் தெளிந்த மதியில் நிலைத்தவனே மனனசீலன் என்னும் சிந்தனையாளனாகச் சொல்லப்படுகிறான். 

யாருடைய பிரக்ஞை நிலைபெறுகிறது? சுபமோ அசுபமோ எது வந்தாலும் அதில் ஈடுபாடு இல்லாதவனாய், எதிலும் மகிழ்வதும் இல்லை, எதிலும் வெறுப்பு அடைவதும் இல்லை என்று இருக்கிறானோ அவனுடைய பிரக்ஞைதான் நிலைத்த தன்மை அடைகிறது. 

யார் புலன் விஷயங்களினின்று புலன்களை, ஆமை தன் அங்கங்களைத் தன் ஓட்டிற்குள் அடக்கிக் கொள்ளுமோ அதைப் போல், புலன்களை விஷயங்களினின்றும் மீட்டுக் கொள்கிறானோ அவனுடைய பிரக்ஞையே நிலைபெறுகிறது. 

தன்னடக்கம் பயிலும் ஒருவரிடமிருந்து புலன் விஷயங்கள் விலகி விடுகின்றன. ஆனாலும் புலன் விஷயங்களின் சுவைமட்டும் எஞ்சி இருக்கிறது. அதுவும் பரம்பொருளைத் தெளிவாக உணரத் தொடங்கும் போது விட்டு விலகிவிடுகிறது. 

உயர்ந்த பேற்றிற்கு முயலும் தெளிந்த மதியுடைய அறிஞனைக் கூட வேகம் மிக்க புலன்கள் வலுக்கட்டாயமாக மனத்தைப் பிடித்து இழுக்கின்றன. 

(இப்படித் தெளிந்த மதியாளனைக் கூட புலன்கள் வலுக்கட்டாயமாக இழுக்கும் என்றால் எப்படித் தப்புவது? என்ன வழி? இங்குதான் கருணையோடு கண்ணன் ஒரு வழியைக் காட்டுகிறான்) 

அர்ச்சுனா! என் விஷயமான ஈடுபாட்டை ஒருவர் வளர்த்துக்கொண்டு விட்டால் அவரிடம் இந்தப் புலன்கள் தங்கள் வேகத்தைக் காட்ட முடியாமல் வலுவிழந்து, அதனால் அவர் யோகத்தில் நிலைபெற்றுத் தன் புலன்களையெல்லாம் தன்வசம் அடக்கியவராய் ஆகிவிடுகிறார். புலன்கள் வசமானவருடைய பிரக்ஞை நிலைபெற்று விடுகிறது. 

என்னிடம் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளாமல் வெறுமனே புலன்களை மட்டும் அடக்கி வசமாக்க முடியாதா என்றால், அப்படி அடக்கி வசமாக்க வேண்டிப் புலன்களை நினைக்கும் போதும் அவற்றின்பால் பற்றுதல் தோன்றி விடுகிறது. புலன்களில் பற்றினால் அவற்றில் காமம் உண்டாகிறது. காமம் தோன்றவே கூடவே குரோதமும் உண்டாகிவிடுகிறது. 

குரோதத்திலிருந்து கவிந்த மோகம் ஏற்படுகிறது. மோகம் கனக்கவே நினைவு மறந்துவிடுகிறது. நினைவு மறதியினால் புத்தி நாசம் அடைகிறது. புத்தி நசித்துவிட்டால் ஒருவர் நசித்துவிடுகிறார். 

பற்று, வெறுப்பு என்பதை விட்டுத் தன்னிடத்தில் வசமாக அடக்கிக்கொண்ட புலன்களுடன் உலக விஷயங்களிடையே நடமாடுபவன், அந்தத் தன்னடக்கம் மிக்கவன் நிலைத்த அமைதியை அடைகிறான். 

நிலைத்த அமைதி திகழும்போது அத்தனை துக்கங்களும் நீங்கிவிடுகின்றன. அமைதி நிலைத்த மனம் கொண்டவனின் புத்தி மிக விரைவில் நிலைபட்டு விடுகிறது. 

இவ்வாறு யோகத்தில் நிலைபெறாதவனுக்குப் புத்தி நிலைநிற்பதில்லை. யோகத்தில் நிலைபெறாதவனுக்கு ஆத்ம உணர்வில் தோய்வதாகிய பாவனை என்பதும் இல்லை. ஆத்ம உணர்வில் தோய்வு என்னும் பாவனையற்றவனுக்குச் சாந்தி என்பது ஏது? சாந்தியற்றவனுக்கு ஏது சுகம்? 

அலையும் புலன்களின் வழியே மனமும் கூடச் செல்லும்படி இருப்பவனுக்கு அலைகடலில் எப்படிக் காற்று நாவாயைத் தன்வழியே இழுத்துச் சென்று விடுமோ அதைப் போல் அவனுடைய பிரக்ஞையை இழுத்துச் சென்று விடுகிறது. 

எனவே தோள்வலி மிக்கவனே! புலன் விஷயங்களில் பாயாமல் யாருடைய புலன்கள் கட்டுப்பட்டு இருக்கிறதோ அவனுடைய பிரக்ஞைதான் நிலைபெற்றது ஆகும். 

பொதுவாக அனைத்து உயிர்களுக்கும் விழித்த நிலையாக இருக்கும் உலக விஷயங்களைப் பொறுத்தவரையில் மனம் அடங்கியவனுக்கு உறங்கும் இரவு போன்றுதான் இருக்கும். மற்றவர்களுக்கு இரவு போன்று இருட்டாக இருக்கும் ஆத்மா பற்றிய விஷயத்திலோ மனனசீலம் மிக்கவனுக்கு விழிப்பு நிலை போன்று ஈடுபாடு மிகுந்து இருக்கும்.

பெருங்கடல். அதனுள் பலவழிகளிலும் நீர்கள் கலந்தாலும் கடல் கலங்காமல் நிலைபெற்று இருப்பது போன்று உலக விஷயங்களின் நடுவே புலனடக்கம் பேணும் நிலைபெற்றவனுக்கு எத்தனைதான் விஷயங்கள் சுற்றியிருப்பினும் அவற்றில் ஈடுபாடு தோன்றாமல் சாந்தியே நிறைந்திருக்கும். பற்றுகொள்பவனுக்கு இல்லை. 

பற்றில்லாமல் ஆசைகளைத் துறந்து, நான் எனது என்ற அபிமானம் இல்லாதிருப்பவன் எவனோ அவனே சாந்தியடைகிறான். 

பார்த்தா! இதுதான் பிரம்மத்தில் நிலைபெறுதல் என்று சொல்லப்படுவது. இந்நிலையை அடைந்தபின் ஒருவன் ஒருபோதும் மயங்குவதில்லை. இந்த நிலையில் நிலைபெற்றுக் கடைசி காலத்திலும் கூட மாற்றம் இன்றி, பிரம்மத்திலிருந்து பிரியும் தடைகள் எல்லாம் நீங்கப் பெற்றவனாய் பிரம்மத்தையே அடைகிறான். 

(அறிவுதான் வழி. வாழ்க்கையில் எப்படிக் கடமையைச் சரிவரச் செய்வது என்பதற்கு மட்டுமன்று. வாழ்க்கையில் முழுமையை அடைவதற்கும் அறிவுதான் வழி. எப்படிப்பட்ட அறிவு? சமத்வம் நிலைபெற்ற அறிவு. ) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***





No comments:

Post a Comment