Tuesday, January 25, 2022

ஸ்ரீ பகவத் கீதை எளிய நடையில் சுருக்கமாக : தொடக்கம்

 ஸ்ரீபகவத் கீதை என்பது ஸ்ரீகிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் போர் தொடங்கும் முன்னர் நடந்த உரையாடல் வடிவில் அமைந்தது. வாழ்க்கையே அனைவருக்கும் போர் போன்று பிரச்சனை நிறைந்ததாக இருக்கிறது. குழப்பங்கள், திடீர் மாற்றங்கள், வெற்றி, தோல்வி பற்றிய நிச்சயமின்மை, மிகத் துணிச்சலாக ஆரம்பித்துவிட்டுப் பின்னர் காரியம் முடங்கிப் போய்விடுவது என்று வாழ்க்கையின் அத்தனை கோளாறுகளுக்கும் ஓர் உருவகமாக வியாச மகரிஷி இந்தத் தொடக்கத்தை அமைத்திருக்கிறார். இதுதான் தற்கால நவீனயுக மனித வாழ்க்கை அல்லவா! அமைதியாக எங்கோ  காட்டில் அமர்ந்து நல்ல விஷயங்களைக் கேட்பது ஏதோ மிகச்சிலருக்கு அமைகிறது. ஆனால் பெரும்பான்மை. போகிற போக்கில், எல்லா கஷ்டங்களுக்கு நடுவிலும்தான் வாழ்க்கையின் முன்னேற்றம் குறித்தும் நாம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அர்ஜுனன் நிலைதான் நமக்கெல்லாம். எதிரிகள் என்று நினைக்கிறோம். ஆனால் பாசம் தடுக்கிறது. நம்மை வளர்த்தவர்கள், நாம் நம்பி வளர்ந்த பலர் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நமக்கு எதிர் அணியில் வந்து நின்று எதிர்க்கின்றனர். பிரச்சனைகளில் முன்னால் போவதா? இல்லை அனைத்தையும் விட்டு எங்காவது அக்கடா என்று போயொழிவதா? ஒன்றும் புரிவதில்லை. இல்லை. ஓடமுடியாது. நின்று செயல் புரியத்தான் வேண்டும். கூடவே மனம் பேதலித்துவிடாமல் நிதானத்துடன் நடந்துகொள்ளவும் வேண்டும். யாரோ நல்ல வேளை அந்த நேரத்தில் தெய்வாதீனமாக நமக்குக் கடவுள் போல் வந்து சில வழிகளைக் காட்டுகின்றனர். வாழ்க்கையை எதிர்கொள்ள ஊக்கம் தருகின்றனர். ஏதோ சில நூல்களைப் படிக்கிறோம். அதன் மூலம் சில தெளிவுகள் பெறுகிறோம். பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமை காத்து நம் கடமையைச் செய்து முன்னேறுகிறோம். பிறகுதான் நாம உணர முடிகிறது. அப்பொழுது பொறுமையாக நம் கடமையைச் செய்ததுதான் நல்லதாகப் போயிற்று. இல்லையேல் விட்டு ஒடியிருந்தால் மிகவும் கஷ்டம் ஆகியிருக்கும். பரவாயில்லை. தெய்வம் கைகொடுத்தது என்று நன்றி சொல்கிறோம். 

இதுதான் அர்ஜுனன் கலக்கமும். அவனுடைய வாழ்க்கை அவனுக்கு. போர்புரிந்துதான் ஆகவேண்டும். தன் குடும்பத்தாரின் வாழ்க்கை, தன் வாழ்க்கை எல்லாம் தான் வென்றெடுத்தாக வேண்டும். ஏன் உறவுக்காரர்கள், தன்னை வளர்த்த பெரியோர், சித்தப்பா, பெரியப்பா, சுற்றம் எல்லாம் நல்லவர்களாகவே இருக்கக் கூடாதா? ஏன் இந்தத் திடீர்மாற்றம்? சரி. தான் தான் இவர்களுக்கு விட்டுக்கொடுத்துப் போய்விட்டால்தான் என்ன? இவர்களையெல்லாம் சண்டை போட்டு என்ன ஜயிக்கப் போகிறோம்? ‘கிருஷ்ணா! தேரை நடுவில் போய் நிறுத்து. யார் என்னை எதிர்க்கத் துணிவுடன் வந்திருக்கிறார்கள் என்று பார்க்கிறேன்.’ என்று தானே வீரம் பேசித்தான் வந்து நிற்கிறோம். ஆனால் ஏன் நமக்கே இந்த மனக்கலக்கம்? ஆம். உறவுகள், மாமன், மச்சான் எல்லாரையும் பகைத்துக்கொண்டு இது என்ன வாழ்க்கை? பாசம் பீறிட்டுக்கொண்டு தன்னில் எழுவதில் தன்னால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. வில் எங்கோ கீழே விழுந்துவிட்டது. போகட்டும். கிருஷ்ணா! வேண்டாம். நான் எங்காவது தவ வாழ்க்கைக்குப் போய்விடுகிறேன். 

’இவ்வாறு மனக்கலக்கத்தில் உட்கார்ந்துவிட்டான் அர்ச்சுனன், திருதராஷ்ட்டிரா! அப்பொழுது ஸ்ரீகிருஷ்ணன் சாரதி ஆசனத்திலிருந்து திரும்பி அர்ச்சுனனைப் பார்த்து தேற்றி உரைக்கத் தொடங்கினான்’ 

என்று சஞ்சயன் திருதராஷ்ட்டிரனுக்கு நடந்ததைத் தெரிவிக்கிறான். ’நம்மவர்களும், பாண்டவர்களைச் சேர்ந்தவர்களும் போர்க்களத்தில் எப்படி அணிவகுத்து நினறனர்? என்ன நடந்தது?’ என்று திருதராஷ்ட்டிரன் தான் சஞ்சயனிடம் முதலில் கேட்டான். தனக்கோ கண் தெரியவில்லை. ஆனால் வில்வீரன் அர்ச்சுனனுக்கோ பாசத்தில் கண் தெரியவில்லை. பாசத்தால் தான் போரில் ஆசைகொண்டு ஆர்வமாகக் கேட்கிறோம். ஆனால் அதே பாசத்தால் கட்டுண்டு அர்ச்சுனன் போரே வேண்டாம் என்று நிலைகுலைந்து உட்கார்ந்துவிட்டான் என்று கேட்டதும் மன்னன் திருதராஷ்ட்டிரனுக்குக் கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் மேலும் என்ன நடந்தது? ஸ்ரீகிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு என்ன சொன்னான்? 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment