Thursday, January 27, 2022

ஸ்ரீ பகவத் கீதை : அறிவுடன் செயலா? செயலின் துறவா?

 ஸ்ரீ கிருஷ்ணர் : ‘அர்ச்சுனா! கர்ம யோகம் என்னும் இந்தச் சிறந்த மார்க்கத்தை நான் ஆதிகாலத்தில் விவஸ்வானுக்குச் சொன்னேன். பிறகு இந்த வழியானது ராஜரிஷிகளின் வழியாகவே வந்துகொண்டிருக்கிறது.’ 

அர்ச்சுனனுக்கு இந்தப் பேச்சு விநோதமாகப் படுகிறது. கேட்கிறான். ‘என்ன கிருஷ்ணா! விவஸ்வான் எவ்வளவு காலத்திற்கு முன்னால் இருந்தவர். நீயோ இதோ இப்பொழுது என் கண்முன்னால் இருக்கின்றாய். அந்தப் பழங்காலத்தில் நீ விவஸ்வானுக்குச் சொன்னாய் என்றால்....’ 

‘அர்ச்சுனா! நீயும் நானும் இப்பொழுதுதான் இந்தப் பிறவியில்தான் சந்தித்துக் கொள்கிறோம் என்றா நினைக்கிறாய்? இல்லை. எத்தனையோ பிறவிகள் இதற்கு முன்னரும் உண்டு அர்ச்சுனா, நானும் நீயும் சேர்ந்து பேசியதும் உண்டு. ஆனால் அதையெல்லாம் நீ அறியவில்லை. நான் முழுதும் அறிந்திருக்கிறேன் பார்த்தா! 

நானும் பிறந்துகொண்டுதான் இருக்கிறேன் என்று யோசிக்கிறாயா? இல்லை. இயற்கையை வசப்படுத்தி என் சொந்த ஆச்சரியமான மாயா சக்தியால் தோற்றம் கொள்கிறேன். அறத்திற்கு எப்பொழுதெல்லாம் நலிவு உண்டாகிறதோ, அறம் அற்றதை அகற்றி அறத்தை மேலோங்கச் செய்ய சிருஷ்டியில் நானே வடிவு கொள்கிறேன். நல்லோரைக் காப்பாற்ற வேண்டும். தீமை புரிவோரை அகற்ற வேண்டும். அறம் என்பதை நன்கு நிலவும்படியாகச் செய்ய அவ்வப்பொழுது யுகத்திற்கு யுகம் தோன்றுகிறேன். 

நான் எப்படித் தோன்றுகிறேன் என்பதோ, நான் தோன்றி என்ன என்ன செய்கிறேன் என்பதோ அனைத்துமே தெய்விகமானவை அர்ச்சுனா! அவற்றை உள்ளபடி அறியும் அறிஞர்கள் இந்தத் தேகத்தை விடுத்து மீண்டும் பிறவியெடுப்பதில்லை. 

பற்று, அச்சம், சினம் ஆகியவற்றைத் துறந்து, என்னிலேயே தோய்ந்தவர்களாய், என்னையே புகலாக எய்தியவர்களாய், ஞானத்தீயில் மாசெல்லாம் அகன்று தூயர்களாய், என்னுடைய பரம நிலையிலேயே அடைந்து விட்டவர்கள் பலரும் உண்டு அர்ச்சுனா! 

யார் என்னை எந்த வழியில் அண்டி ஆர்வமுடன் தொழுகிறார்களோ அவர்களுக்கு அந்த வழியிலேயே அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகிறேன். மக்கள் எந்த வழியைப் பின்பற்றினாலும் என்னை நோக்கிய வழியில்தான் பின்பற்றி வருகின்றனர் பார்த்தா! 

இந்த உலகம் செயல்களுக்கு வெற்றியைத் தரும் உலகம். எனவே தமக்கு வேண்டியவற்றில் வெற்றியைக் குறித்து மக்கள் பல தெய்வங்களுக்கு வேள்வி புரிகின்றனர். ஆனால் நானோ கர்மங்களில் கட்டுண்டவன் இல்லை. கர்ம பலன்களிலும் எந்தப் பற்றும் இல்லை. இதை நன்கு உணர்ந்தவர்கள் கர்மங்களில் கட்டுண்டு இருப்பதில்லை. இப்படி உணர்ந்துதான் முன்னால் இருந்த முமுக்ஷுக்களும் (முக்தியில் வேட்கை கொண்டோர்) கர்மத்தை யோகமாகப் புரிந்து சென்றார்கள். நீயும் அவ்வாறே முன்னோர் முற்காலத்தில் செய்து போந்த நெறிப்படியே கர்மத்தை யோகமாகச் செய். 

செயல் என்றால் என்ன? செயலின்மை என்றால் என்ன? இந்த விஷயத்தில் பெரும் அறிஞர்களே குழம்புகின்றனர். ஒருவரை உலக ஆசைகளில் பந்தப் படுத்தும் செயல் என்பது அசுபம் ஆகும். அதிலிருந்து விடுபடும் வகையில் செயல் ஆற்றுவது எப்படி என்று உனக்குச் சொல்கிறேன். அதை அறிவதால் அசுபத்திலிருந்து நீ விடுபடலாம். 

கர்மங்கள் யாவை என்று அறியவேண்டும். கர்மங்களில் செயற்பாலது, விலக்கத்தக்கது என்னும் விரிவையும் அறிய வேண்டும். செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஞானநிலை என்னும் அகர்மம் என்றால் என்ன என்றும் அறிய வேண்டும். செயல் என்பதன் மார்க்கம் உண்மையில் ஆழமானது. 

யார் கர்மத்தின் நடுவே அகர்மத்தைப் பார்க்கிறானோ, செயலுக்கு நடுவே செயல்களைத் தாண்டிய ஞானம் என்பதையும் உட்கொண்டு நடக்கிறானோ, அகர்மம் என்பது உண்மையில் அகங்காரம், மமகாரம், பலன்களில் பற்று என்னும் இவற்றைத் துறந்து யோகமாகக் கர்மத்தை ஆற்றுவதே ஆகும் என்று அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறானோ அவனே சம்த்வ புத்தி என்பது வாய்ந்த புத்திமான். மனிதர்களில் அவனே யோகி. செய்ய வேண்டியதனைத்தையும் செவ்வனே செய்வோன். 

யார் அனைத்து முயற்சிகளையும் உள்நோக்கத்தோடு முனைதல் என்னும் சங்கல்பத்தையும், பலனில் ஆசையையும் விடுத்துச் செய்கிறானோ, அறிவாகிய தீயில் யாருடைய கர்மங்கள் எரிக்கப்பட்டு விட்டதோ அவனையே ஞானிகள் பண்டிதன் என்று சொல்கிறார்கள். 

கர்மத்தின் பலன்களில் பற்றுதலை விடுத்து, என்றும் திருப்தியுற்றவனாய், எதையும் எதிர்பார்த்துச் சாராதவனாய் இருப்பவன் எத்தனை கர்மங்கள் செய்தாலும் சிறிதும் செயல் புரியாதவனாகவே கருதப்படுவான். 

எதிர்பார்ப்பு எதுவும் இன்றி, உடல் மனம் ஆகியவற்றை நன்கு அடக்கி, அனைத்து விதத்திலும் பற்றையொழித்த அவனோ வெறுமனே பார்வைக்குச் செயல் புரிகிறவனாய் இருப்பதால் குறைகள் அவனைச் சேர்வதில்லை. 

செயலில் யதேச்சையாகக் கிடைப்பதில் முழு திருப்தியடைந்து, இரட்டைகளைக் கடந்து, அழுக்காறு என்பதை அகற்றி, எய்துவது எய்தாமல் போவது என்பதில் சமபுத்தியுடன் இருப்பவன் செயல் புரிந்தாலும் அதனால் கட்டுண்பதில்லை. 

பற்றுவிட்டவன், விடுதலையடைந்தவன், ஞான அவஸ்தையில் மனம் நிலைத்தவன், யக்ஞம் என்னும் நோக்கில் மட்டுமே செயல் புரிபவன், அவனுடைய அனைத்து கர்மங்களும் கரைந்துவிடுகின்றன. 

பிரம்மத்திற்கே அனைத்தையும் அர்ப்பணித்தான், பிரம்மமே அவன் அர்ப்பணிக்கும் படையலும், எதில் அர்ப்பணிக்கிறானோ அந்தத் தீயும் பிரம்மமே, யார் அர்ப்பணிக்கிறான் அவனும் பிரம்மமே, பிரம்மத்திற்கே அவன் செல்கிறான், பிரம்மத்திலேயே அவன் கர்மம் நிறைவடைகிறது. 

யக்ஞம் என்பதைப் பலரும் பலவடிவில் செய்கிறார்கள். சில யோகியர் முழுமையாக உபாசனை செய்தல் என்னும் விதத்தில் தெய்வத்தைக் குறித்து யக்ஞம் செய்கின்றனர். சிலர் பிரம்மமாகிய அக்னியில் தம்மையே அர்ப்பணிப்பதாகிய யக்ஞத்தைச் செய்கின்றனர். சிலரோ கேள்வி முதலிய புலன்களை அடக்குவது ஆகிய யக்ஞத்தைச் செகின்றனர். சிலரோ இந்திரியங்கள் என்னும் அக்னியில் சப்தம் முதலிய புலன் விஷயங்களை யக்ஞமாகச் செய்கின்றனர். இன்னும் சிலர் இந்திரியங்கள் அனைத்தின் வேகத்தையும், பிராணன்களின் இயக்கத்தையும் தன்னடக்கம் என்னும் யோக அக்னியில் ஞான நெருப்பால் தூண்டப்பட்டு யக்ஞம் செய்கின்றனர். திரவியங்களை யக்ஞம் செய்வோர், தவம் என்பதை யக்ஞம் செய்வோர், யோகமாகிய யக்ஞம் செய்வோர் என்று பலப்பலர். நன்னெறிக்கான நூல்களைப் படிப்பது, அறிவதில் ஈடுபடுவது என்று சிலர் சுயக் கட்டுப்பாட்டுடன், விரதம் மிக்கு யக்ஞமாகச் செய்கின்றனர். 

இன்னும் சிலரோ உடலுக்குள் செல்லும் மூச்சு, உடலை விட்டு வெளியே செல்லும் மூச்சு என்று அதில் கருத்தைச் செலுத்தி மூச்சுக்காற்றின் இயக்கத்தை நிறுத்திப் பிராணாயாமம் என்பதை யக்ஞமாகச் செய்கின்றனர். சிலரோ உணவுக் கட்டுப்பாடு என்பதைக் கைக்கொண்டு காற்றில் காற்றைப் படையலாகச் சொரிவது போன்று யக்ஞம் புரிகின்றனர். 

இவர்கள் அனைவரும் யக்ஞத்தைப் பலவிதத்தில் அறிந்தவர்கள். யக்ஞம் செய்வதால் தம் தோஷங்கள் நீங்கப் பெற்று, யக்ஞத்தில் மிஞ்சியதை உண்பவர்களாய் என்றும் இருக்கும் பெருநிலையான பிரம்மத்தையே அடைகிறார்கள். அவ்வளவு ஏன் அர்ச்சுனா! இந்த உலகத்திலேயே பொதுநன்மை என்னும் யக்ஞத்தில் பங்கு கொண்டு அதன் விளைவாக வரும் வளத்தில் பயனடைவோரே உலகத்தில் மதிக்கப்படுகின்றனர். அறத்தின் வழிநின்ற வாழ்க்கை அதுதான். இதற்கு மாறாக நடப்பவர்கள் நல்ல வாழ்க்கையை இந்த உலகத்திலேயே இழந்துவிடுகிறார்கள் என்னும் போது யக்ஞம் என்னும் பொதுநன்மை, முழுமையான நோக்கம் என்பதில்லாமல் மறுமையில் மட்டும் அவர்களுக்கு எப்படி நற்கதி உண்டாகும் சொல்! 

பிரம்மத்தின் வாயிலாகப் பல விதமாக யக்ஞம் இருக்கிறது. கர்மத்தை யோகமாகப் புரிதல் என்னும் அதிலிருந்து இத்தனை வித வடிவமாக யக்ஞம் உண்டாகிறது. இதை நன்கு அறிந்து விடுபடுவாய் அர்ச்சுனா! 

பரந்தபா! திரவிய யாகங்களை விட ஞானயக்ஞம் சிறந்தது. கர்மங்கள் எல்லாம் ஞானத்தில் நிறைவை எய்துகின்றன அன்றோ! அத்தகைய ஞானத்தை நீ ஞானிகளிடம் சென்று சேவை புரிந்து நன்கு விசாரித்துத் தெரிந்துகொள். தத்வத்தை உள்ளபடி உணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தைப் போதிப்பார்கள். 

எதையறிந்தால் மீண்டும் மோகத்தை அடையமாட்டாயோ, அந்த ஞானத்தை அடைந்த பின்னர் உயிர்கள் அனைத்தையும் உன்னிடத்திலும், உன்னையும் சேர்த்து என்னிடத்திலும் அடங்கியிருக்கக் காண்பாய். பெரும் பாபம் புரிந்தவனாயினும் ஞானம் என்பது ஓடம் போல் அவனை மீட்டு நன்னிலைக்குக் கொண்டு வருகிறது. 

வளர்க்கப்பட்டு நன்கு எரியும் அக்கினியில் விறகைப் போட்டாலும் எப்படிப் பொசுக்கிவிடுகிறதோ அப்படியே அர்ச்சுனா! ஞானம் என்னும் அக்கினியானது கர்மங்கள அனைத்தையும் சாம்பல் ஆக்கிவிடுகிறது. 

தூய்மைப்படுத்துவதில் ஞானத்திற்கு ஒப்பாகச் சொல்ல எதுவும் இல்லை. அதை நீயே யோகத்தால் அறியவருவாய். காலத்தில் உனக்குள்ளேயே அந்த ஞானம் உண்டாகும். 

அதிலேயே ஊன்றிய மனத்தனாய், புலன்களை அடக்கியவனாய் சிரத்தையுடன் இருப்பவனுக்கு ஞானம் உண்டாகும். ஞானத்தால் உயர்ந்த சாந்தி மிகவிரைவில் எய்தப்படுகிறது. 

அஞ்ஞானத்தில் ஊன்றியவன், அசிரத்தையின் இருப்பிடம் ஆனவன், சந்தேகமே பழக்கமாய் உடையவன் அழிந்துதான் போகிறான். சந்தேகமே வழக்கமாய் உடையவனுக்கு இம்மையும் இல்லை, மறுமையும் இல்லை, சுகமும் இல்லை. 

எனவே யோகமாகச் செயலைப் புரிவதன் மூலம் கர்மத்தை விடுத்து, ஞானத்தால் சந்தேகம் என்பதை மாய்த்து ஆத்மாவிலே பொருந்தியிருப்பவனைக் கர்மங்கள் பந்தப்படுத்துவதில்லை தனஞ்சயா! 

அதனால் அஞ்ஞானத்தில் விளைந்ததும் இதயத்தில் புரையோடியதுமான சந்தேகம் என்பதை ஞானம் என்னும் ஒண் வாளால் வெட்டிச் சாய்த்து யோகத்தில் நிலைபெற்று எழுந்திடு பாரதா! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

1 comment: