Sunday, January 23, 2022

உளன் எனில் உளன்

உளன் எனில் உளன், அவன் உருவம் இவ் உருவுகள்; 
உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள்; 
உளன் என, இலன் என, இவை குணம் உடைமையில், 
உளன் இரு தகைமையொடு, ஒழிவு இலன் பரந்தே. 

(திருவாய்மொழி, நம்மாழ்வார்) 

இருக்கிறது, இல்லை என்று இரண்டுபடியாகத்தான் சொல்ல முடியும். ஒன்று இருக்கிறது என்றால் எங்கு இருக்கிறது, எப்படி இருக்கிறது, எதுவரை இருக்கிறது, எப்பொழுது இருக்கிறது இப்படித்தான் கேள்விகள் வரும். ஒன்று இல்லை என்றால் முன் எப்பொழுது இருந்தது? இங்கில்லை என்றால் வேறு எங்கு இருக்கிறது? ஒரு வடிவில் இல்லையென்றால் இப்பொழுது எந்த வடிவில் இருக்கிறது? என்று கேள்விகள் வரும். உலகத்தில் ஒரு நாளுமே இல்லாத ஒன்றைக் குறித்து இல்லை என்ற பேச்சும் வருவதற்கு இடமில்லை. பகவான் என்று நினைத்ததும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இருக்கிறார் என்றா? 
எங்கும் எப்பொழுதும் எந்தப் பொருளிலும் உள் உயிராய் இருப்பவர் பகவான் என்னும் போது நீங்கள் இல்லை என்று நினைத்தால் அதை எப்படிப் புரிந்து கொள்வது? நிச்சயம் நீங்களும் பொய் சொல்லவில்லை. உங்கள் அனுபவத்தைத்தான் சொல்கிறீர்கள். உங்கள் அனுபவத்தில் கடவுள், பகவான் இல்லையே என்று நினைக்கிறீர்கள். நம் அனுபவம் பொய் சொல்லுமா? இந்த இடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம் ஒன்றைச் சிந்திப்பது உதவியாய் இருக்கும். ‘பகலில் நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதனால் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லிவிடுவாயா? இரவு நேரத்தில் அவை கண்ணுக்குத் தெரிகின்றனவே! அது போல் உன் அஞ்ஞானம் மதியை மூடியிருக்கும் காலத்தில் கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் கடவுளே இல்லை என்று சொல்ல முடியுமா? உன் அஞ்ஞானம் நீங்கி ஞானம் உதயம் ஆகும் பொழுது கடவுள் இருப்பதை உணர்வாய்’ என்பது ஸ்ரீராமகிருஷ்ணர் வாக்கு. அதைப் போல் உளனலன் எனில் நம் அஞ்ஞான தசையில் இல்லை என்கிறோம். எத்தனையோ பொருட்கள் உலகத்தில் கண்ணுக்குக்கே தெரியாமல் அருவமாக இருக்கவில்லையா? அவற்றைக் காணச் சரியான உபாயம் கொண்டு காணும் போது அவை புலனாகின்றன. அப்படியென்றால் காணாத நிலையில் அவை இல்லவே இல்லை என்று யாரேனும் சொல்வார்களா? எனவே கடவுள் இருக்கிறார் என்னும் போது அனைத்துப் பொருட்களிலும் உள்ளுயிராய் இருப்பதாக உணரப்பட வேண்டியவராக இருக்கிறார். இல்லை என்று கருதும் போது நம் அஞ்ஞானதசையில் நமக்குப் புலப்படவில்லை என்று உணரப்பட வேண்டியவராக இருக்கிறார். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment