Sunday, January 23, 2022

நற்குணச் சமயிகள்

கருமமான பிறப்பற ஒருகதி 
காணாது எய்த்துத் தடுமாறும் 
கலக காரண துர்க்குண சமயிகள் 
நானாவர்க்கக் கலைநூலின் 
வரும் அநேக விகற்ப விபரித 
மனோபாவத்துக்கு அரிதாய 
மவுன பூரித சத்திய வடிவினை 
மாயாமற்குப் புகல்வாயே! 
தரும வீம அர்ச்சுன நகுல 
சகாதேவர்க்குப் புகலாகிச் 
சமர பூமியில் விக்ரம வளைகொடு 
நாள் ஓர் பத்தெட்டினில் ஆளும் 
குருமகீதலம் உட்பட உளம் அது 
கோடாமல் க்ஷத்ரியர் மாளக் 
குலவு தேர்கட அச்சுதன் மருக ! 
குமாரா கச்சிப் பெருமாளே! 

(திருப்புகழ், ஸ்ரீஅருணகிரிநாதர்) 

மதம், சமயம் என்பது மனிதர்க்கு நல்வழியைக் காட்டத்தான் இருக்கிறது. எது நல்வழி? கருமம் காரணமாகத் தொடர்ந்துவரும் பிறப்பு ஆசை உலகியல் முதுமை என்று சங்கிலிபோல் சென்று ஒரு நாளும் ஆத்மஞானம் என்ற நினைவே எழாமல் செய்துவிடும் வழியிலிருந்து நீங்கினாலே அது நல்ல வழிதான். அப்பொழுது என்ன புரிகிறது? உலகின் மாற்றங்களையெல்லாம் கடந்து மவுனமாக நிற்கும் அந்தச் சத்தியம்தான் நமக்குப் புகல். ஆனால் பொதுவாகச் சமயங்களில், மதங்களில் நாம் காண்பது என்ன? அகங்காரத்தாலும், துர்க்குணங்களாலும் நிறைந்த மனிதர் சமயங்களின் பேரால் பெரும் விகற்பங்களையும், அநேகவிதமான விபரீதமான மனோபவங்களுக்கு ஆளாகி நிற்பதைப் பார்க்கிறோம். குற்றங்கள் அனைத்தையும் கடந்து மவுன மயமாய் நிற்கும் சத்தியம் இந்தச் சண்டையில் அகப்படுமா? இதில் மாட்டிக் கொண்டால் அந்தச் சத்தியத்தை அடைய முடியுமா? நற்குணச் சமயிகளாக நாம் உய்வதற்கு வழி தேட வேண்டாமா?  எனவே குமரப் பெருமானாகிய நீர்தாம் நாங்கள் அந்தச் சத்தியத்தை அடைந்து வாழ்வதற்குக் கருணை செய்ய வேண்டும். நீர் எப்படிப்பட்டவர்! பஞ்சபாண்டவர்களுக்குப் புகலான அச்சுதர் குருக்ஷேத்ரத்தில் வெற்றிச் சங்கை ஊதியபடி, க்ஷத்ரியர்கள் போரிட்டவர்கள் மாளும்படியாகத் தேர்செலுத்திப் பூமிபாரம் குறைத்தாரல்லவா! அவருடைய மருகன் அன்றோ நீர் முருகய்யா? கச்சிப்பெருமாளே! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment