Saturday, January 29, 2022

ஸ்ரீ பகவத் கீதை : தியானம் முக்கியம்

 தியானத்தின் முக்கியத்தைச் சொல்லத் தொடங்குகிறான் ஸ்ரீ கிருஷ்ணன். துறவி என்றால் புற வடிவம், புற நடவடிக்கை என்று புரிந்துகொள்வதை விட உண்மையான விதத்தில் துறவாவது யாது என்பதை மீண்டும் வலியுறுத்தித் தொடர்கிறான். 

‘கர்மபலன்களில் பற்றை விடுத்துச் செய்ய வேண்டியது என்ன, செயல், அதை செய்ய வேண்டிய முறை என்று செய்பவன் பார்க்கப் போனால் உண்மையில் அவனே சந்நியாசி. அவனே யோகி. வேள்விகள் புரிவதற்கான அக்கினியை விட்டவன் சந்நியாசி என்பதன்று. அதேபோல் எல்லா செயல்களையும் கைவிட்டவன் தான் சந்நியாசி என்பதோ யோகி என்பதோ அன்று. சந்நியாசம் என்று சொல்லப்படுவதுதான் யோகமும் ஆகும் என்பதை உணர்வாய். பலன்களைக் குறித்த தன் சங்கல்பங்களைச் சந்நியாசம் செய்யாமல் யாரும் கர்மயோகியாக ஆவதில்லை. 

கர்மத்தை யோகமாகச் செய்யவேண்டும் எனில் முதலில் கர்மம் செய்தல் என்பதே தொடக்கம். (செயல் எதுவும் செய்யாத சோம்பேறித்தனம் கர்மயோகமாக ஆகாது). அடுத்து கர்மயோகம் என்பதில் யோகம் என்ற அம்சம் சித்திக்க வேண்டும் என்றால் சமத்துவ புத்தி என்பதன் காரணமாகத்தான் கர்மம் என்பது கர்மயோகமாக மாறுகிறது. 

எப்பொழுது புலன் விஷயங்களிலும், செயல்களிலும் ஒருவனுக்குப் பற்று என்பது இல்லாமல் போகிறதோ, உள்நோக்கத்துடன் செய்யும் செயலுக்கான சங்கல்பங்கள் அனைத்தும் எப்பொழுது ஒருவன் துறந்துவிடுகிறானோ அப்பொழுதே ஒருவன் யோகத்தில் உயர்ந்து முன்னேறிவிட்டான் என்று ஆகிறது. 

ஜீவன் என்பவன் தன் மனத்தாலேயே தன்னை மேல்தூக்கி உயர்த்திக் கொள்ள வேண்டும். மனத்தால் தான் தாழ்ந்து போக ஒரு நாளும் விடக் கூடாது. ஆத்மாவிற்கு உற்ற நண்பனாய் ஆகக் கூடியதும் மனமே. பகையாய்ப் போய்விடக் கூடியதும் இந்த மனமேயாகும். 

எப்படி மனம் நண்பனாக ஆகிறது? எப்படி மனம் பகையாக மாறுகிறது? நன்கு அடக்கித் தன்வசப்படுத்தப்பட்டால் மனம் உற்ற நண்பனாக ஆகிவிடுகிறது. அடக்கி வசப்படுத்தப்படாத மனமே பகையாகி எதிர்க்கவும் செய்கிறது. 

நன்கு வசப்பட்ட மனம் உடையவன், நிறைவும், உயர்ந்த மனநிலையும் வாய்த்தவனாய் இருப்பவனின் பெரிய ஆத்மாவோ என்றால் குளிர்ச்சி, வெப்பம், சுகம், துக்கம், மானம் அவமானம் என்பனவற்றில் ஒரே மாதிரியாக அடங்கி அமைதியாக இருக்கிறது. 

ஆத்ம ஞானத்திலும், இயற்கையைக் குறித்த தெளிந்த அறிவிலும் திருப்தியடைந்தவனாய், ஆத்மா என்பதில் நிலைபெற்றவனாய், புலன்களை வென்றவனாய், கல்லுருண்டை, பொன் ஆகியவற்றில் நிலைபெயராத சம புத்தியுடையவனாய் இருக்கும் கர்மயோகியே யோகத்தில் நன்கு பொருந்தியவன் எனப்படுகிறான். 

நலம் விழைவோன், நண்பன், பகைவன், பொருட்டாக நினைக்காமல் இருப்பவன், சார்பு, எதிர்ப்பு இல்லாமல் நடுநிலையாக இருப்பவன், வெறுப்பவன், உறவினன், நல்லவன், பாபி என்று அனைவரிடமும் ஆத்மா என்பதில் நிலைபெயராத சமபுத்தியுடன் இருப்பவன் சிறந்து விளங்குகிறான். 

யோகியானவன் எப்பொழுதும் தனியிடத்தில் இருந்துகொண்டு தனிமையில் தன்னை யோகத்தில் பொருத்த வேண்டும். எண்ணம், மனம் என்பதை நன்கு அடக்கியவாறு ஆசைகள் அற்றவனாய், பொருட்களைச் சேர்ப்பதில் கருத்தில்லாதவனாய் யோகத்தில் ஆழவேண்டும். 

தூய்மையான இடத்தில் நன்கு நிலைப்படுத்தி அதிக உயரமும் அதிக தாழ்ச்சியும் இல்லாத ஆசனமிட்டு அதில் அமர்வதற்கு உரிய விரிப்பை விரித்து, அந்த ஆசனத்தில் அமர்ந்து மனத்தை ஒருமுகப்படுத்தி, புலன்களையும் அதன் செயல்களையும் முழுதும் அடக்கித் தன் இதய சுத்திக்காக யோகம் பயில வேண்டும். 

உடல், கழுத்து, தலை ஆகியவற்றை நேராக நிலைநிறுத்தி, அசையாமல், நிலையாக நின்று மூக்கின் நுனியில் பார்வையை நிறுத்தி, எத்திசையிலும் பாராமல், உயர்ந்த மனநிலையுடன், பயத்தைத் துறந்தவனாய், காமத்தைத் துறந்த பிரமச்சாரி விரதத்தில் நிலைத்தவனாய், மனத்தை அடக்கி, என்னிடம் இலயித்த சித்தமுடன், என்னைக் குறித்து யோகத்தில் அமர வேண்டும். 

இவ்வாறு எப்பொழுதும் மனத்தைச் செலுத்தியவனாய் நன்கு கட்டுண்ட மனத்தையுடைய யோகி பரநிலையில் தடையற்றுத் திகழ்வதும் என்னில் நிலைநிற்பதுமான சாந்தியை அடைகிறான். 

அதிகம் உண்பவனுக்கும் யோகம் இல்லை. உண்ணாமலே இருப்பவனுக்கும் யோகம் இல்லை. அதிகம் தூங்குபவனுக்கும் யோகம் இல்லை. தூங்காமல் விழித்தே இருப்பவனுக்கும் யோகம் இல்லை. 

உணவில் சரியான அளவு, பொழுதுபோக்கில் சரியான அளவு, செயல்களில் சரியான அளவு, தூக்கம், விழிப்பு என்பதில் சரியான அளவுடன் யோகம் பயில்பவனுக்கு யோகம் துக்கத்தைத் துடைப்பதுவாய் அமைகிறது. 

எப்பொழுது நன்கு அடங்கிய மனமானது ஆத்மாவிலேயே நன்கு பொருந்திவிடுகிறதோ, அனைத்து காமங்களிலிருந்தும் விருப்பு அகன்றுவிடுகிறதோ அப்பொழுதே யோகத்தில் நன்கு பொருந்தியவன் என்று ஒருவன் சொல்லப்படுகிறான். 

’காற்றில்லாவிடத்தே அசையாமல் நின்று எரியும் தீபம்’ என்பதைத்தான் உவமையாகச் சொல்கிறார்கள் நன்கு அடங்கிய மனத்துடன் தன்னில் யோகம் பயிலும் யோகியைக் குறித்து. 

எங்கு யோகத்தில் ஆழ்ந்த மனமானது முற்றிலும் அடங்கி, ஆத்மாவை ஆத்மாவால் பார்ப்பதாகிய அனுபவத்தால் சித்தம் உவகை பூத்து நிற்கிறதோ, எங்கு முடிவற்ற சுகத்தை ஒருவர் புத்தியினால் உணர்கிறாரோ, எந்தச் சுகம் புலன்களுக்கெல்லாம் எட்டாததோ, எதில் நிலைத்து அதிலிருந்து நிலைபெயர்வதில்லையோ, எதை அடைந்ததும் அதனினும் அடையத்தக்கது ஒன்று உண்டு என்று கருதுவதில்லையோ, எதில் நிலைபெற்றபின் மிகப்பெரும் துக்கம் வரினும் ஒருவர் சற்றும் சலிப்படைவதில்லையோ, துக்கத்தினின்றும் முழுதும் விடுபட்ட இந்த நிலையை யோகம் என்று அறிவாயாக. இந்த யோகமானது நிச்சய புத்தியுடன் சற்றும் மனத்தளர்ச்சியின்றி இயற்றப்படல் வேண்டும். 

உள்நோக்கமுள்ள சங்கல்பங்களினின்றும் உண்டாகும் ஆசைகள் அனைத்தையும் துறந்து, எல்லாப் பக்கத்தினின்றும் மனத்தை புலன்களிலிருந்தும் மீட்டு, மெதுவாக, மெதுவாக புத்தியினால் நன்கு பற்றி மனத்தை விஷயங்களினின்றும் மீட்க வேண்டும். அந்த மனத்தை ஆத்மாவிலேயெ நன்கு பொருந்துமாறு செய்துகொண்டு வேறு எதையும் பற்றிச் சிந்திக்காமல் இருக்க வேண்டும். 

எங்கெங்கெல்லாம் நிலையற்றதும் சலிக்கின்றதுமான இந்த மனம் திரியுமோ அங்கங்கிருந்தெல்லாம் தடுத்து நெறிப்படுத்தி மனத்தை ஆத்மாவிலேயே இலயிக்குமாறு செய்ய வேண்டும். 

உயர்ந்த மனநிலையில் ஆழ்ந்தவனும், சாந்தியில் திளைப்பவனும், ரஜோகுணம் நீங்கப் பெற்றவனும், தோஷங்கள் அகன்றவனும், பிரம்மமாகவே ஆகிவிட்டவனும் ஆன அந்த யோகி உத்தமமான சுகத்தை அடைகிறான். 

தோஷங்கள் நீங்கப் பெற்று, ஆத்மாவில் நிலைத்தலாகிய யோகத்தில் பொருந்தியவன் எளிதில் சுகமாகப் பிரம்மத்தில் திகழும் முடிவற்ற சுகத்தை அனுபவிக்கிறான். 

யோகத்தில் ஆழ்ந்த மனமுடையோன் எங்கும் சமத்துவத்தையே காண்கிறான். அனைத்து உயிர்களிலும் தன் ஆத்மாவே இருப்பதையும், அனைத்து உயிர்களும் தன் ஆத்மாவில் இருப்பதையும் உணர்கிறான். 

என்னையே எங்கும் காண்பவனும், என்னிடத்திலேயே அனைத்தையும் காண்பவனுமான அந்த யோகி என்னை ஒரு பொழுதும் இழப்பதில்லை; அவனை நானும் ஒரு பொழுதும் இழப்பதில்லை. 

ஒற்றுமை உணர்வில் ஊன்றி, அனைத்து உயிர்களிலும் வதியும் என்னை வழிபடும் யோகியானவன் எவ்விதத்தில் வாழ்பவனாய் இருப்பினும், அந்த யோகி என்னிடத்திலேயே வாழ்பவன் ஆகிறான். 

அனைத்திலும் இருக்கும் ஆத்மா என்ற சமத்துவப் பார்வையில், சுகமோ, துக்கமோ ஒன்றாகக் கருதியிருக்கும் யோகி எவனோ அவன் மிக உயர்ந்தவன் என்பது என் கருத்து. 

அர்ச்சுனன் கூறுகிறான். : 

‘மதுசூதனா! சமத்துவப் பார்வையில், நீ சொல்லும் இந்த யோகமானது நிலைத்து நிற்க முடியும் என்று நான் கருதவில்லை. சஞ்சலத்தன்மை உடையது இந்த மனம். 

இந்த மனம் சஞ்சலமானது. கிருஷ்ணா! அடங்காதது, வலியது, முரடானது. அதை அடக்குவது என்பது என் கருத்தின்படிப் பார்த்தால் காற்றை அடக்குவதைப் போன்று செயற்கரியது.’ 

ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார் (ஆத்ம சாதன வழியில் மிக முக்கியமான குறிப்பு இஃது) : 

‘பெருந்தோள் படைத்தவனே! சந்தேகமே இல்லை. மனத்தை அடக்குவது மிகவும் அரியது. மனம் சலிக்கும் இயல்புடையது. ஆனால் விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் தொடர்ந்து இயற்றுவது ஆகிய அப்யாசத்தினாலும், பற்றுகளை ஒழித்த நிலையாகிய வைராக்கியம் என்பதை விடாமல் கைக்கொள்வதனாலும் மனத்தைக் கட்டியடக்க முடியும். 

என் கருத்தின்படிப் பார்த்தால் சுயக்கட்டுப்பாடு இல்லாதவனால் யோகமானது அடைதற்கரிது. ஆனால் சுயக்கட்டுப்பாடு உடையவனால் விடாமுயற்சியினால் தகுந்த உபாயங்களால் யோகம் எய்த முடியும்.’ 

அர்ச்சுனன் கேட்கிறான்: 

‘ஒருவன் சிரத்தையோடு முயல்கிறான். ஆனால் தகுந்த அளவு முயற்சியைச் செய்யவில்லை. மனம் சஞ்சலத்தில் அடங்காமல் போகிறது. அவன் யோகத்தில் முழுமையாக நன்னிலை எய்தவில்லை. அப்பொழுது அவனுடைய கதி என்ன ஆகும்? 

’உலக வாழ்க்கையும் இழந்து, யோக சித்தியும் இழந்து பிரம்மத்தை நோக்கியப் பாதையில் முனைந்த அவன் மனம் குழப்பத்திலாழ்ந்து பெருங்காற்றில் அகப்பட்ட மேகம் போல் சிதறுண்டு அன்றோ போய்விடுவான், கிருஷ்ணா? 

’இதுதான் என் சந்தேகம். இதை நீதான் தீர்க்க வேண்டும் கிருஷ்ணா! இந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பதற்கு உன்னை விட்டால் புகலில்லை.’ 

ஸ்ரீகிருஷ்ணனின் பதில் : 

‘பார்த்தா! இங்கும் சரி. அங்கும் சரி. அவனுக்கு அழிவு என்பதே கிடையாது. ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள். நன்மையைச் செய்த யாரும் துர்க்கதியை அடைவதே கிடையாது குழந்தாய்!’ 

(உலக இலக்கியங்களிலேயே உன்னத வாக்கியம் இதுவாகும். நன்மையைச் செய்தவர்களுக்குக் கஷ்டம்தான் வரும் என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களே நிறைந்த உலகில் கணீரென்று கிருஷ்ணனின் குரல் ஒலிக்கிறது ‘நன்மையைச் செய்தவர் ஒரு நாளும் அழிவை அடைவதில்லை’ என்று. ) 

’யோகத்தில் வெற்றியடையாமல் போனவர் புண்ணியங்கள் செய்தவர்கள் எய்தும் லோகங்களை அடைந்து தம் கர்மங்கள் கழிந்த பின்னர் உலகில் தூயோரும், வளமுடையோரும் ஆனவர்களின் இல்லத்தில் பிறக்கின்றனர். 

’அல்லது யோகிகளின் குடும்பத்தில் வந்து பிறக்கின்றனர். ஆனால் அவ்வாறு யோகிகளின் குடும்பத்தில் வந்து பிறக்கும் பிறப்பானது மிகவும் அரிதாக நிகழக் கூடியது. 

’இரண்டு விதத்தில் எப்படியேனும் பிறந்தபின் தங்களுடைய விட்டுப்போன முன்னர் வாய்த்த புத்தியை மீண்டும் பெற்றவர்களாய், முன் தேகத்தில் விட்ட இடத்திலிருந்து யோகத்தில் தொடர்கின்றனர். முன்னம் செய்த அப்யாசத்தின் வலிமையால் அவர்களையும் மீறி யோகத்தில் அவர்கள் முன்னேற்றம் காண்கின்றனர். யோகத்தில் அவர்களுக்கு உண்டாகும் ஞான இச்சை என்பது அவர்களைத் தன்னைப்போல் இயற்கையின் பல அனுபவ நிலைகளைத் தாண்டிப் போகச் செய்து விடுகிறது. இப்படி ஆர்வமுடன் முயன்று தோஷங்களெல்லாம் அகலப்பெற்றுத் தூயராய், பல பிறவிகளில் விடாமல் தொடர்ந்த முயற்சியினால் உயர்ந்த கதிக்குச் செல்கின்றனர். 

’எனவே யோகியானவன் தவம் செய்பவனை விடவும் சிறந்தவன். ஞானியை விடவும் சிறந்தவன் என்பது என் கருத்து. கர்மிகளைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. எனவே யோகியாக ஆவாய் அர்ச்சுனா! யோகிகளிலும் யார் ஒருவர் என்னிடம் முற்றிலும் தோய்ந்த உள்ளத்தராய், சிரத்தையோடு என்னைத் தொழுகின்றார்களோ அவர்கள் யோகிகளிலெல்லாம் சிறந்தவர் என்பது என் கருத்து.’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


No comments:

Post a Comment