Friday, January 28, 2022

ஸ்ரீ பகவத் கீதை : துறவு என்றால் என்ன?

(’யோகமாகச் செய்வதில் கர்மங்களைத் துறந்துவிடு’ என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னதைக் குறித்து குழப்பம் தெரிவிக்கிறான் அர்ச்சுனன். அவன் குழம்புகிறானோ இல்லையோ நாம் இப்படியெல்லாம் குழப்பம் கொள்வோம் என்பதை எதிர்பார்த்திருக்கிறார் வேத வியாஸர். அதாவது ’பலன்களில் இச்சை, நான் எனது என்ற எண்ணம், நான் தான் செயல் புரியும் அதிகாரி என்ற நினைவு’ இந்த மூன்றும் சாதாரணமாகக் கர்மம் புரிபவருக்கு இருப்பவை. இந்த மூன்றோடு கர்மம் செய்தால் அந்தக் கர்மம் உலகக் கவலைகளில் ஆழ்த்திப் பந்தப்படுத்திவிடும். அவனை வெறுமனே கர்மி என்றுதான் சொல்லமுடியும். ஆனால் ’பலன்களில் இச்சை, நான் எனது என்ற எண்ணம், தான் தான் செய்யும் அதிகாரி என்னும் நினைவு’ என்ற மூன்றையும் விடுத்து அதே கர்மங்களைச் செய்யும்போது அது கர்மயோகமாக ஆகிவிடுகிறது. அப்பொழுது யோகமாகச் செய்வதில் கர்மங்களைத் துறந்துவிடு என்று சொல்வதில் பொருளுண்டு. ஆனால் கர்மம் செய்வது என்றாலே கர்மியாக இருந்து மூன்றையும் விடாமல் கர்மம் செய்வதுதான் என்ற எண்ணம் பலமாக இருப்பவர்க்கு இந்த நுட்பமான வித்யாசம், கர்மத்திற்கும், கர்மயோகத்திற்கும் இடையில் இருக்கும் வித்யாசம் லேசில் புரியாது. இதை நம் மனத்தில் ஆழமாகக் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக அர்ச்சுனன் கேட்பதும் அதை ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குவதும் இங்கு பயன்படுகிறது.) 

அர்ச்சுனன் : ‘கிருஷ்ணா! கர்மங்களைத் துறந்துவிடு என்றும் சொல்கிறாய். பின்னர் கர்மயோகம் என்றும் சொல்கிறாய். சந்நியாசம் அது சிறந்ததா? அல்லது கர்ம யோகமா? ஏதாவது ஒன்றை நிச்சயமாகச் சொல்.’ 

ஸ்ரீகிருஷ்ணன் : ‘சந்நியாசம், கர்மயோகம் இரண்டுமே சிறப்பைத் தருபவை. இந்த இரண்டில் கர்மங்களை விட்டுவிடுவதாகிய சந்நியாசம் என்பதை விடக் கர்மங்களை யோகமாக இயற்றும் கர்ம யோகமே மிகவும் சிறந்தது. 

சந்நியாசி என்றால் நீ வெளித் தோற்றத்தை வைத்துப் புரிந்து கொள்கிறாய். யார் வெறுப்போ, விருப்போ இன்றி, இரட்டைகளில் சிக்காமல், பந்தங்களினின்றும் விடுபட்டுச் சுகமே இருக்கிறாரோ அவரை நித்யமான சந்நியாசி என்று நீ அறிந்துகொள். 

ஞானத்தை மட்டும் கைக்கொண்டு சாங்க்யம் என்ற வழி தனி என்றும், கர்மயோகம் என்பது தனி வழி என்றும் சொல்பவர் அறிவு வளராத சிறுபிள்ளைகள் போன்றோர். பண்டிதர்கள் அங்ஙனம் நினைப்பதில்லை. இரண்டில் எதில் நீ நன்கு புரிந்துகொண்டு தொடர்ந்து சென்றாலும் ஒரே நன்னிலைதான் முழுமையாகக் கிடைக்கப் பெறும். 

ஞானத்தையே வழியாகக் கொண்ட சாங்கியர்கள் என்று சொல்லப்படுவோர் எந்த நிலையை அடைகிறார்களோ அதே நிலையைத்தான் கர்மயோகம் என்பதைக் கைக்கொண்டு செல்வோரும் அடைகின்றனர். ஞானமாகிய சாங்கிய வழியும், கர்மயோக வழியும் ஒன்றே என்று புரிந்துகொண்டவர்கள்தாம் உண்மையில் புரிந்தவர்கள். 

சந்நியாசம் என்று ஞானத்தையே கைக்கொண்டு அனைத்தையும் துறந்து செல்லும் வழியிலும் மூவிதத் தியாகத்துடன் கூடியதாகிய யோகத்தின் துணையில்லாமல் இலட்சியத்தை அடைவது மிகவும் கடினம். ஆனால் யோகத்தில் பொருந்திய மனனசீலம் மிக்கவனோ தாமதமின்றி விரைவில் பிரம்மத்தை அடைந்து விடுகிறான். 

யோகத்தில் பொருந்திய அந்தத் தூயவன், தனது புலன்களை வென்று வெற்றியாளனாகத் தன் ஆத்மாவே அனைத்து உயிர்களினுள்ளும் திகழும் ஆத்மா என்று உணர்ந்தவனாய் அவன் கர்மங்கள் புரியினும் அவனை எந்தக் கர்மமும் தொடுவது கூட இல்லை. 

எதையும் துளியும் நான் செய்வது கிடையாது என்ற மனப்பாங்கை யோகியானவன் கொள்ள வேண்டும். பார்ப்பது, கேட்பது, தொடுவது, முகர்வது, உண்பது, செல்வது, தூங்குவது, மூச்சுவிடுவது, பேசுவது, கழிப்பது, பிடிப்பது, கண் திறப்பது, மூடுவது என்று அனைத்தும் புலன் விஷயங்களை புலன்கள் செய்கின்றன என்று எண்ணத்தைக் கொண்டவனாய் இருக்க வேண்டும். 

பிரம்மத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் பற்றில்லாமல் யார் கர்மங்களைச் செய்கிறானோ அவனிடம் பாபங்கள் ஒட்டுவதில்லை. தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லையன்றோ! 

தமது உள்ளத் தூய்மைக்காக வேண்டி மட்டும் யோகியர் உடலால், மனத்தால், புத்தியால், பற்றைத் துறந்து, புலன்களால் மட்டும் கர்மங்கள் புரிகின்றனர். 

யோகியானவர் கர்மபலன்களில் பற்றைத் துறந்து, விடாத ஈடுபாட்டால் விளைந்த சாந்தியை அடைகின்றனர். யோகம் கைக்கொள்ளாதவரோ பலன்களில் பற்றால் கர்மங்களால் கட்டுண்டு விடுகின்றனர். 

அனைத்துக் கர்மங்களையும் மனத்தளவில் துறந்த தன்னடக்கம் வாய்ந்தவன் ஒன்பது வாயில் புரமாகிய உடலில் எதையும் செய்யாமலும் செய்ய வைக்காமலும் சுகமாக உறைகிறான். கர்மங்களையோ, கர்மங்களைச் செய்யும் அதிகாரி என்னும் மன நிலையையோ, கர்மப் பலன்களையோ படைத்தவர் உயிர்களுக்கு உண்டாக்கவில்லை. சுபாவத்தின் வழியே அனைத்தும் பின் தொடர்கிறது. எங்கும் விரிந்த முழுமையில் பாபம் என்றோ, புண்ணியம் என்றோ தனியே வைக்கப்படுவதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் மூடி மறைக்கப்பட்டு அதனால் உயிர்கள் மயக்கம் அடைகின்றன என்பதுதான். 

யாரிடத்தில் ஞானத்தால் அஞ்ஞானம் என்பது அழிக்கப்பட்டுவிட்டதோ அவர்களிடத்தில் ஆதித்யனைப் போன்று ஞானமானது பரம நிலையை நன்கு விளங்கக் காட்டுகிறது. அந்தப் பரம நிலையில் தோய்ந்த புத்தியும், அதிலேயே இலயித்த தங்கள் ஆத்மாவுமாய், அதிலேயே நன்கு நிலைபெற்றவர்களாய், அதையே தங்கள் அறுதியான புகலிடமாய்க் கொண்டவர்களாய், ஞானத்தால் தோஷங்கள் நீங்கப் பெற்று மீண்டு வருதல் இல்லாத பெருநிலைக்கு அவர்கள் செல்கின்றனர். 

பேரறிவால் அவர்களுக்குப் பெரும் அடக்கம் உண்டாகிறது. பண்டிதர்களாகிய அவர்கள் நன்கு கற்றவர்கள் மீதும், பசுக்களின் மீதும், யானை, நாய், நாயின் இறைச்சியை உண்பவர் என்று யாரிடத்தும் சமத்துவமான பார்வையைக் கொள்கின்றனர். 

யார் சமத்துவம் என்னும் மனப்பாங்கில் நிலைத்தவர்களோ அவர்கள் இங்கேயே மாறும் இந்த உலகிலேயே அவர்கள் வெற்றியடைந்துவிட்டனர். பிரம்மம் என்பதே தோஷங்கள் எதுவும் அற்ற சமமான நிலை என்பதுதானே! எனவே அவர்கள் பிரம்மத்திலேயே நிலைத்துவிட்டனர் அன்றோ! 

ஆத்மாவில் நிலைத்த புத்தியுடன் உடல்தான் தான் என்ற மயக்கம் சிறிதும் அற்றவர்களாய், பிரம்மத்தை அறிந்தவர்களாய், பிரம்மத்தினிடமே நிலைபெற்றவர்களாய் இருப்போர் பிரியமானவை வரும் பொழுது உற்சாகம் அடைவதோ, பிரியமற்றவை வரும் பொழுது பதட்டப்படுவதோ இல்லை. 

புறப்பொருட்களில் எவ்விதப் பற்றும் அற்று, ஆத்மா ஒன்றிலேயே சுகம் காண்பவர் எவரோ, பிரம்மத்தினிடம் எப்பொழுதும் ஈடுபடும் தோய்ந்த உள்ளம் கொண்ட அத்தகையோருக்குக் குறைவேயற்ற சுகம் விளைகிறது. 

புறப்பொருட்களின் தொடர்பால் உண்டாகும் போகம் துக்கத்தின் பிறப்பிடமாகும். ஆரம்பித்து ஒரு காலத்தில் முடிந்துவிடும். அறிவாளிகள் அவற்றில் இன்புறுவதில்லை. 

உடல் விழும் முன்னே இங்கேயே யார் இந்தக் காமம், குரோதம் இவற்றின் வேகத்தை மறுத்துத் தாங்கவல்லவரோ அவரே மனிதர்களில் யோகியானவர், சுகமும் அவருக்கே. 

யாருடைய சுகம் உள் எனப்படும் ஆத்மாவிலோ, யாருடைய ஓய்வும், இன்பமும் ஆத்மாவிலோ, யாருக்கு உள்ளே சோதி விளக்கமாக இருக்கிறதோ அந்த யோகியே பிரம்மமாகவே ஆகித் தடைகள் அற்ற பிரம்ம அனுபவத்தை அடைகிறான். 

இரட்டைகளின் இடரகற்றி, ஆத்மாவிலேயே அடங்கிய மனத்தராய், அனைத்து உயிர்களையும் தன் ஆத்மாவே போல ஒப்பக் கருதி அவற்றின் நன்மையில் மகிழ்பவராய் இருக்கும் ரிஷிகளே தோஷங்கள் எல்லாம் அகன்றவராய் தடையற்ற பிரம்ம அனுபவத்தை அடைகின்றனர். 

காமம், குரோதம் முற்றிலும் நீங்கப் பெற்றவராய், தன்னடக்கமே பயிலும் இயல்பினராய், சிந்தையும் நன்கு அடங்கப் பெற்றவராய், ஆத்ம ஞானம் வாய்க்கப் பெற்றோருக்கு இங்கேயே தடையற்ற பிரம்ம அனுபவம் அவர்கள் கையகத்ததாய் ஆகிவிடுகிறது. 

புறப்பொருட்களின் தொடர்பை வெளியே நிறுத்தி, புருவங்களுக்கிடையில் பார்வையை நிறுத்தி, நாசிகளின் வழியே இயங்கும் பிராணன், அபானன் இவைகளின் கதிகளைச் சமமாக ஆக்கி, புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை அடக்கி, மோக்ஷமே ஒரே இலட்சியமாகத் திகழும் மனன சீலனாகிய முனியாய் இருப்பவர் யாரோ, இச்சை, பயம், குரோதம் எல்லாம் கழன்றவராய் யார் இருக்கின்றாரோ அவர் எப்பொழுதும் முக்தராகவே ஆனவர். 

அப்படிப்பட்டவர் அனைத்து யக்ஞங்கள், தவம் அனைத்திலும் என்னையே அனுபவிப்பவன் என்பதை அறிந்து, என்னையே அனைத்து உலகங்களுக்கும் மகத்தான ஈச்வரனாய் அறிந்து, அனைத்து உயிர்களுக்கும் உற்ற நண்பனாய் என்னையே அறிந்து சாந்தியில் ஆழ்கிறார். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment