Wednesday, January 26, 2022

ஸ்ரீ பகவத் கீதை : செயலையே யோகமாக ஆக்கு!

 அர்ச்சுனன் கேட்கிறான். அவனா கேட்கிறான்? நாம்தான் கேட்கிறோம். எத்தனை முறை கேட்டிருப்போம்! 

‘ஜநார்த்தனா! அறிவு என்றும் சொல்கிறாய். பிறகு செயல் புரி என்றும் சொல்கிறாய். இரண்டையும் நீயே சொல்கிறாய். கலந்து கலந்து சொல்கிறாய். செயலை விட அறிவே சிறந்தது என்பது உன் எண்ணம் என்றால் பின் ஏன் என்னைக் கொடுமையான கர்மத்தில் ஏவுகிறாய்? ஏதாவது ஒன்றைச் சொல். எது சிறந்தது? எதைத் தேர்ந்தெடுத்தால் நான் சிறப்பு எய்த முடியும்?’ 

கண்ணனுக்கோ உள்ளூற சிரிப்பு. போர் புரியமாட்டேன் என்று உட்கார்ந்தவன் இப்பொழுது அறிவா செயலா என்னும் விசாரத்திற்கு வந்துவிட்டான். யார் யாரிடமோ பல விஷயங்களைக் கேட்டிருக்கிறான். இப்பொழுது இதுவா அதுவா என்று அல்லாடுகிறான்! 

‘அர்ச்சுனா! உலகத்தில் பார்த்தால் இரண்டுவிதமான அக்கறையுள்ள மனிதர்கள் இரண்டுவிதமான ஈடுபாடுகள் உடையோராய் இருக்கின்றனர். அறிவு ஆராய்ச்சியால் அறுதியான தத்துவத்தையும், உயர்ந்த பேற்றையும் எய்துவதில் ஒரு சாரார் ஈடுபாடு கொண்டுள்ளனர். மற்றவர்கள் செயலை யோகமாகச் செய்தலில் நாட்டம் கொண்ட யோகிகள். 

செயலையே ஆரம்பிக்க வேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம் என்று வெறுமனே இருப்பதால்  மட்டுமே கர்மம் அற்ற நிலை என்னும் நைஷ்கர்ம்யம் என்பது அடையப் படுவதில்லை. செயலைத் துறப்பதால் மட்டுமே உயர்ந்த அந்த இலட்சியம் எய்தப்படுவதும் இல்லை. நீ செயல் செய்ய மாட்டேன் என்று இருந்தாலும் மனித உயிரின் அமைப்பு, இயற்கையானது உன்னை எப்படியோ ஏதாவது செயலில் ஈடுபட வைத்துவிடும். சரி. கர்மம் செய்யமாட்டேன் என்று அடம்பிடிப்பவன் புறத்தில் எதுவும் செய்யாமல் உள்ளத்தில் ’இதைச் செய்திருக்கலாம், அதைச் செய்திருக்கலாம், இந்த நேரத்திற்கு இதையெல்லாம் செய்திருந்தால் இவற்றை அடைந்திருக்கலாம். என்ன செய்வது? வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டோம். இப்பொழுது என்ன செய்ய முடியும்?’ என்று மனத்தில் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் அவன் அறிஞன் என்றோ யோகி என்றோ ஆகமாட்டான். உண்மையில் பொய்யான ஒழுக்கமும் எண்ணமும் கொண்டவன் என்றுதான் ஆகும். 

ஆனால் புலன்களை அடக்கிப் பற்றில்லாமல் செயல்களைக் கர்மயோகமாகச் செய்பவனோ சிறப்பை எய்துகிறான். 

நியதமாகச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய். செயல் செய்யாமல் இருப்பதை விட அது எவ்வளவோ மேலானது. 

உலகம் நன்மையுற வேண்டுமென்றால் பலரும், பல செயல்களையும் அந்த நேரத்தில் தங்களுக்கு எந்த லாபம் இல்லையென்றாலும் பொது நன்மை என்பதைக் கருத்தில் கொண்டு அக்கறையாகச் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு பொதுநன்மைக்கு என்று அக்கறையுடன் சொந்த லாபம் என்ற பற்றின்றிச் செய்யப்படுவது யக்ஞம் என்று சொல்லப்படும். ஆனால் மக்களோ இந்த யக்ஞம் என்ற நோக்கமுமின்றி, யக்ஞம் என்பதையும் சொந்த லாபத்திற்காக என்று செய்யும் பொழுது அவர்களின் செயலே அவர்களையும் அழிக்கிறது. பொதுவிலும் நன்மையும் விளைவதில்லை. எனவே குந்தியின் மைந்தா! நீ எப்பொழுதும் எதைச் செய்தாலும் பொதுநன்மை யக்ஞம் என்பதை மனத்தில் கொண்டு, பலன்களில் பரபரப்பு இன்றிச் செயல் புரிவாயாக. படைக்கும் பொழுதே பிரஜாபதியானவர் இந்தப் பொதுநன்மை என்னும் யக்ஞம் என்பதை மக்களுக்குக் கொடுத்து ’இதை மறக்காமல் கைக்கொண்டு உங்கள் வளர்ச்சியைச் சாதித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டியதையெல்லாம் இந்தப் பொது நன்மையாவது யக்ஞம் என்பதை மீறாமல் அதன் மூலமாகவே அடையுங்கள். உங்களுக்கு நன்மையைச் செய்யும் காமதேனுவாய் இந்தப் பொதுநன்மை என்னும் யக்ஞம் இருக்கட்டும்’ என்று சொல்லித்தான் தொடங்கிவைத்தார். 

பொதுநன்மை என்று அக்கறையுடன் செய்யப்படும் செயல்கள் இனி வருங்காலத்திற்கும் நன்மை திகழ்வதாய் ஆகிவிடுகின்றன. அவற்றை அப்படி ஆக்கித் தருகிறார்கள் தேவர்கள். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் இப்படிப் பரஸ்பரம் உறவை ஏற்படுத்தி வைத்தார் படைத்தவர். அதனால்தான் தேவர்களுக்குத் தராமல் தன் செயலைத் தானே உண்பவன் திருடன் என்று கருதப்படுகிறான். யக்ஞமாகச் செய்யும் செயல்களின் பலன்களை அனுபவிப்பவன் அனைத்துக் குறைபாடுகளிலிருந்தும் விடுபடுகிறான். ஆனால் தன் சொந்த லாபம் என்று பொது நன்மையை ஒதுக்கி உண்பவன் பாபத்தைத்தான் உண்கிறான். 

உணவையே யோசித்துப் பார்! அன்னத்திலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. அன்னமோ மழையிலிருந்து உண்டாகிறது. மழையோ யக்ஞம் என்பதிலிருந்து உண்டாகிறது. யக்ஞம் என்பதே செயல்களைக் கர்மயோகமாக இயற்றுவதிலிருந்து ஏற்படுவதுதான். கர்மயோகம் என்பதோ பிரம்மம் அடிப்படையாக உண்டாவது. பிரம்மம் என்பதோ நமக்கு அருள்மயமான வாக்கிலிருந்து தெரியவருகிறது. அதனால் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரம்மம் என்றும் பற்றின்றிக் கர்மயோகமாக இயற்றப்படும் யக்ஞத்தில் நிலைபெற்றிருப்பது என்று அறிவாயாக. 

இது ஒரு தொடர் சக்கரம் போன்றது. இதைச் சுழற்றுவதில் அனைத்து மனிதரும் தம் தம் பங்கை அளிக்க வேண்டும். அப்படி இந்தப் பொதுச் சுழற்சியில் பங்கேற்காமல் ஒதுங்குபவன் பாபமே வாழ்க்கையாய் வீணே ஜீவிப்பவன் ஆகிறான். 

செயல் வேண்டாம். செயல் வேண்டாம் என்கிறாயே! யாருக்குச் செயல் இல்லை என்பதை நீ அறிவாயா? யார் ஆத்மா ஒன்றிலேயே இலயித்து நிற்கிறானோ, ஆத்மா ஒன்றிலேயே திருப்தியுற்றவனாய் இருக்கிறானோ, ஆத்மா ஒன்றிலேயே நிறைந்த மகிழ்ச்சி கொண்டவனாய் ஆகிவிட்டானோ அவனுக்குத்தான் செயல் என்பது இல்லாமல் போகிறது. அப்படிப் பட்டவனுக்குத்தான் செயலால் ஒரு நன்மையும் இல்லை. செய்யாமையால் ஒரு நஷ்டமும் இல்லை. அனைவர் நடுவிலும் அவனுக்கு எதைக் குறித்தும் யாரையும் சார்ந்தும் இருப்பதில்லை. 

எனவே தேவையில்லாத குழப்பத்தை விடு. பற்றை விட்டுக் கர்மத்தையே யோகமாகச் செய். அவ்வாறு பற்றற்ற செயலாலேயே நீ உயர்ந்த பேற்றை அடைவாய். ஜனகர் போன்றவர்கள் இவ்விதம் கர்மயோகத்தால்தான் பெரும்பேற்றை அடைந்தார்கள். இவ்வளவு ஏன்? உலக நன்மை என்ற ஒன்றை நீ கருதினால் கூடக் கர்மயோகம் அவசியம் என்று புரியும். 

உலகத்தில் உயர்ந்தவர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் உலக மக்களும் அப்படியே பின்பற்றுகிறார்கள். அவர்கள் எதைச் சான்றாகச் செய்கிறார்களோ அதைத்தான் உலகமும் கைக்கொள்கிறது. எனக்கு இந்த உலகத்தில் எந்தச் செயலும் செய்து எதையும் அடைய வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனால் நானோ எந்நேரமும் செயல் செய்தவண்ணம் இருக்கின்றேன். காரணம் நான் செயல் புரியவில்லையென்றால் உலக மக்களும் செயலை ஒதுக்கி அதனால் துன்புறுவார்கள். உலகத்தில் அறியாமையில் இருப்பவர்கள் பலனுக்காகக் கர்மம் செய்கிறார்கள். ஆனால் அறிவாளியோ பலன்களில் பற்று வைக்காமல் பொதுநன்மை என்னும் கருத்துடன் கர்மத்தை யோகமாகப் புரிகின்றனர். 

இயற்கையில் குணங்களால் ஏவப்பட்டு மக்கள் கர்மங்கள் புரிகின்றனர். அகங்காரத்தால் கட்டுண்டு தாம் தான் செய்வதாக நினைக்கின்றனர். ஆனால் தத்வத்தை அறிந்தவர் குணங்கள் கர்மங்கள் என்ற வித்யாசம் புரிந்தவர் குணங்களால் எல்லாம் நடக்கின்றன, தமக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுடன் இயங்குகின்றனர். 

என்னிடம் எல்லாக் கர்மங்களையும் அர்ப்பணித்து விடு. ஆத்மா பற்றிய நினைவுடன், மமகாரத்தை விட்டு, ஆசைகள் இல்லாதவனாய் இந்த நடுக்கத்தை ஒழித்துப் போர்புரி. 

என்னைக் கருத்தில் கொண்டு நான் சொன்ன இந்த வழியில் யார் செயல் புரிந்தாலும் அவர்களும் கர்மங்களின் தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். தம் இயற்கையால் ஏவப்பட்டு ஞானிகளும் கூடக் கர்மம் புரிகின்றனர் என்றால் நீ  மட்டும் உன் ஸ்வபாவமான இயற்கையிலிருந்து தப்பித்துவிட முடியுமா? என்ன ஒன்றில் கவனமாக  இருக்க வேண்டும். புலன்கள், புலனின்பங்கள், பற்று, வெறுப்பு இவை இருக்கின்றன. இவற்றில் ஒருவர் மாட்டிக்கொள்ளாமல் கவனமாக  இருக்க வேண்டும். உன் சொந்தக் கடமை உனக்குப் பழக்கப்பட்டது. அதைவிட்டுப் பிறருடைய கடமையையா செய்யப் புகுவாய்? 

அர்ச்சுனன் யோசிக்கின்றான். ஆம். சரிதான். ஆனால் கடமை, பற்றில்லாமல் செய்வது என்பது சரியே. ஆனால் செயல் புரியும் போது நம்மையும் மீறி, ஏதோ வேகத்தால் இழுக்கப்பட்டுப் பாபம் என்பதைத் துணிந்து செய்கிறோமே? அது ஏன்? என்று கேட்கிறான். ஸ்ரீ கிருஷ்ணர் பதில் சொல்கிறார்: 

‘அதுவா? காமம் என்று ஒன்று. குரோதம் என்று ஒன்று. இரண்டும் வலிமையான ஈர்ப்பு உடையன. பெரும்பாபம் ஆனவை இவை. ரஜோகுணத்திலிருந்து உண்டாகுபவை. 

தீயைப் புகை மூடுவது போல், கண்ணாடியைத் தூசி மூடுவதுபோல், கருவைச் சுற்றித் தோல் மூடுவதுபோல் அறிவை முற்றிலும் மூடி மறைத்துவிடும் இவை. ஞானத்தையே மறைக்கும் வல்லமை உடைய இந்தக் காமம் இது ஞானிகளுக்குப் பெரும்பகை. காமமோ போட்டதையெல்லாம் உண்டு மேலும் கொழுந்துவிட்டு எரியும் தீ போன்றது. 

இந்திரியங்கள், மனம், புத்தி இவைதான் காமத்தின் இடங்கள். இதில் பற்றிக்கொண்டு எழுந்து மோகம் அடையச் செய்து மனிதர்களை அவர்களின் ஞானத்தை மறைத்துவிடும். 

எனவே முதலில் இந்திரியங்களை அடக்கு. காமமாகியப் பெரும் பகையைக் கொல். இந்திரியங்களை விடப் பெரியது மனம். மனத்தை விடப் பெரியது புத்தி. புத்தியைக் காட்டிலும் உயர்ந்தது ஆத்மா. எனவே ஆத்ம ஞானத்தில் நிலைநின்றபடி புத்தி மனம் ஆகியவற்றை நல்வழியில் செலுத்தி அடக்க அரிதான பெரும்பகையான காமத்தை ஒழித்துவிடு. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

No comments:

Post a Comment