வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்
தெள்ளாத் தெளிந்தார்க்குச் சீவன்சிவ லிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே.
(திருமூலர், திருமந்திரம்)
சென்று அடையும் கோயில் இருக்கிறது. அதுபோல் நின்று அடையும் கோயில் இந்த மனிதச் சரீரம். எப்படி? கோயில் என்றால் பிராகாரம், முகப்புக் கோபுரம், உள்ளே கர்ப்பக்கிருகம், அங்கு எப்பொழுதும் அணையாமல் நின்று எரியும் விளக்கு இதெல்லாம் உண்டுதானே. நம் சரீரத்திலும் அதைப் போலவே இருக்கிறது. ஊனுடம்புதான் ஆலயவளாகம். அதற்குள் இருக்கும் கருவறைதான் நம் உள்ளம். வருவோர்க்கு எல்லாம் வரமளிக்கும் வள்ளல் நம் உடம்பினுள் இருக்கிறார். அவருடைய புகழையும், நாமங்களையும் பாடும் முகப்புக் கோபுரம்தான் நம்முடைய வாய். நாம் தெளிவு அடைய அடைய நம்முடைய சீவன் தான் கருவறையில் இருக்கும் சிவலிங்கம். அதாவது தெளிவு ஏற்பட ஏற்பட நம் ஆத்மாவிற்குள் அந்தர்யாமியாய்க் கடவுளைக் காண்போம். உள்ளத்தை இப்பொழுது அலைக்கழிக்கிறதே புலன்கள் அவை என்ன ஆகின்றன? ஆடாது அசங்காது எப்பொழுதும் நின்று எரியும் காளாமணி விளக்கங்களாய் ஆகிவிடுகின்றன.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
பக்கம் நின்றார் 🙏 நமசிவாய நாதன் தாள் வாழ்க.
ReplyDelete