ஸ்ரீ கிருஷ்ணன் :
‘என்னிடம் ஈடுபட்ட மனமும், என்னைத் தழுவி ஆழ்ந்த யோகமும் பொருந்தி நீ எப்படி என்னைப் பற்றி நன்கு உணர முடியும் என்பதை நன்கு கேள் அர்ச்சுனா! அந்த ஞானத்தையும், அதன் தொடர்பான அறிவின் விரிவையும் இவற்றையெல்லாம் மிச்சமின்றி உனக்குச் சொல்கிறேன், எதை அறிந்தபின் அறிய வேண்டியது எதுவும் எஞ்சி இருக்காதோ அதை உனக்குச் சொல்கிறேன்.
மனிதர்கள் பலரிலும் இலட்சியத்தை அடைய வேண்டி முயல்பவர்கள் மிகச்சிலர். அவ்வாறு முயல்பவர்களிலும் என்னை உள்ளபடி அறிபவர்களோ மிகவும் சிலரே.
பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் அகங்காரம் இங்ஙனம் எட்டுப் பிரிவாய் இருப்பது என்னுடைய இயற்கை. இதனினும் வேறாய் இவற்றினும் மிக்கதாய் என்னுடைய ஓர் இயற்கை உண்டு. அதுதான் ஜீவன் என்பது. இவற்றால்தான் இந்த உலகம் தாங்கப்படுகிறது. இந்த இரண்டு இயற்கைகளின் காரணமாகவே உயிர்கள் அனைத்தும் உருவாகின்றன என்று அறிவாயாக. நானே இவற்றைப் படைப்பவனும் மீட்டும் இவற்றையெல்லாம் ஒடுக்குபவனும் என்று அறிவாயாக. என்னிலும் உயர்ந்தது எதுவும் இல்லை. என்னிலேயே நூலில் மணிகணங்கள் போல் இவையெல்லாம் கோக்கப்பட்டிருக்கின்றன.
நீரில் அதன் நீர்மையாகவும், சந்திர சூரியர்களில் அவற்றின் ஒளியாகவும் இருப்பது நானே. வேதங்கள் அனைத்திலும் பிரணவமாகவும் (ஓம்காரம்), ஆகாயத்தில் ஒலியாகவும், மனிதரில் அவர்களின் ஆள்வினையுடைமையாகவும் இருப்பது நானே. மண்ணில் நறுமணமாகவும், நெருப்பில் திகழ்ச்சியாகவும், அனைத்து உயிர்களிலும் ஜீவனமாகவும், தவத்தினரின் தவமாகவும் இருப்பது நானே. அனைத்து உயிர்களுக்கும் என்றும் மாறாத ஆதி வித்தாகவும், புத்தியில் சிறந்தவரிடம் புத்தியாகவும், ஒளியுற்றுத் திகழ்வோரிடம் ஒண்மையாகவும் திகழ்வது நானே.
ஆசை, பற்று அகற்றிய பலவான்களின் பலமாகவும், அறத்திற்கு விரோதம் இல்லாத ஆசையாகவும் நான் இருக்கிறேன். சாத்விக மனநிலை, ராஜஸ, தாமச மனநிலை அனைத்தும் என்னிலிருந்து உண்டாகுபவை என்று அறி. அவை என்னில் இருக்கின்றன. ஆயினும் அவற்றிற்கு அகப்பட்டு நான் இல்லை. இந்த மூன்று குணங்களால் ஆன மனநிலைகளில் மயக்கமுற்று இந்த உலகம் என்னைத் தெரிந்துகொள்வதில்லை. நானோ இவற்றைக் கடந்து மாற்றம் எதுவுமற்றவனாய் இருக்கின்றேன். தெய்வ காரணமாய் உண்டானதும், முக்குண மயமானதுமான இந்த என்னுடைய மாயையானது கடத்தற்கு முடியாதது. என்னையே யார் சரணம் ஆடைகின்றார்களோ அவர்களே இந்த மாயையைக் கடந்து செல்கின்றனர்.
தீமை புரிவோர், மூடர்கள், மனிதர்களில் இழிந்தகுணம் உள்ளவர்கள், மாயையில் அறிவை இழந்தவர்கள், அசுரத்தன்மை உள்ள மனநிலைகளில் தோய்ந்தவர்கள் என்னை அண்டிச் சரணம் அடைவதில்லை.
மக்களில் நான்கு விதமானவர்கள் நன்மை செய்வோராய் என்னைத் தொழுகிறார்கள். துயருற்றவர்கள், அறிவதில் வேட்கை கொண்டோர், செல்வத்தை வேட்பவர்கள், ஞானிகள் என்னும் நான்கு வகையினர். அவர்களில் ஞானியானவன் என்றும் என்னில் பொருந்திய யோகியாய், என் ஒருவனையே கருதும் பக்தியால் சிறந்தவன் ஆகிறான். எனக்குப் பிரியமானவன் ஞானி. அவனுக்குப் பிரியமானவனும் நானே. இந்த நான்கு வகையினருமே பெருந்தன்மை மிக்கவர்கள். அவர்களிலும் ஞானி என்பவன் என் ஆத்மாவே என்று என் கருத்து. அவன் தன்னை முற்றிலும் என்னிடம் பொருத்தியவனாய் என்னையே மிக்குயர்ந்த கதிப்பேறாய்க் கொண்டிருப்பவன். பல பிறவிகள் கழிந்த பின்னர்தான் ஒரு ஞானி ’வாசுதேவனே இஃதனைத்தும்’ என்று உணர்ந்து என்னை அண்டிச் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா கிடைத்தற்கரியவன்.
பலப்பல ஆசைகளால் அறிவு கவரப்பட்டும், தம் தம் இயல்பினால் ஏவப்பட்டும் மக்கள் பிற தெய்வங்களைச் சார்ந்து அவ்வவற்றிற்குரிய நியமங்களைப் பின்பற்றுகின்றனர். யார் யார் எந்த வடிவத்தில் சிரத்தையுடன் வழிபட விரும்பினாலும் அவர்களின் சிரத்தையை அந்தந்த வழியில் அசையாததாய் ஆக்குகிறேன். அத்தகைய சிரத்தை நிலைபெற்று அவர்கள் அந்த வடிவத்தை ஆராதித்துத் தங்கள் விருப்பங்கள் நிறைவேறப் பெறுகின்றனர். அவை என்னாலேயே நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. இவ்வாறு பல வடிவங்களைத் தொழுது அவர்கள் பெறும் பலன்கள் முடிவுறும் பலன்கள். முடிவுறும் பலன்களை விரும்பி அந்தத் தெய்வ வடிவங்களை அண்டி வேள்விகள் புரிகின்றனர். என்னையே விரும்பும் என் பக்தன் என்னைச் சரணம் எய்துகிறான்.
மாற்றமிலாததும், உயர்வற உயர்ந்ததும் ஆன என்னுடைய மிக்குயர்ந்த இயல்பை அறியாராய் மக்கள் தம் மதியிழந்து என்னை வெளிப்படாத நிலையிலிருந்து இப்பொழுது வெளிப்பட்டு வடிவு கொண்டவனாய்க் கருதுகின்றனர். என்னுடைய யோகமாயையால் நன்கு மறைக்கப்பட்டு நான் அனைவருக்கும் புலனாவதில்லை. மூடத்தனத்தால் உலகினர் என்னைப் பிறவாதவன் என்றும், மாற்றம் அற்றவன் என்றும் அறிந்துகொள்வதில்லை.
கடந்துபோனவை, நிகழ்ந்துகொண்டிருப்பவை, இனியுண்டாகுபவை என்று அனைத்து உயிர்களையும் நான் அறிவேன். ஆனால் யாரும் என்னை அறிவது இல்லை. பிறந்தது தொட்டே உயிர்கள், இச்சை, வெறுப்பு என்பனவற்றால் வலுவாக உருவான இரட்டை என்னும் மோகத்தால் உயிர்கள் அனைத்தும் பெரிதும் மயக்கமுற்றுச் செல்கின்றன. புண்ணிய கர்மத்தால் பாபம் நசித்துவிட இரட்டை என்னும் மோகத்தினின்றும் முற்றிலும் விடுபட்டுத் திடமான விரதம் பூண்டவர்களாய் என்னையே வழிபடுகிறார்கள்.
முதுமை, மரணம் இவற்றினின்றும் விடுபடவேண்டி என்னைச் சரணடைந்து முயல்பவர்கள், அவர்கள் பிரம்மத்தை அறிகின்றனர், ஆத்மா என்பதைப் பற்றிப் போதிய அளவு அறிகின்றனர், மேலும் கர்மம் என்பதைப் பற்றி அனைத்தையும் அறிகின்றனர்.
ஐம்பூதங்கள் மயமான உலகை அறியும் போதும் என்னோடு இணைத்து யார் அறிகின்றர்களோ, தெய்விக விஷயங்கள் குறித்து அறியும் போதும் என்னோடு இணைத்தே யார் அறிகின்றார்களோ, யஜ்ஞம் சம்பந்தமான விஷயங்களைக் குறித்தும் என்னோடு இணைத்தே யார் அறிகின்றார்களோ அவர்கள் கடைசியில் பிரயாணப்படுகின்ற காலத்திலும் விலகாமல் பொருந்திய உள்ளத்துடன் என்னையே அறிந்தவாறிருக்கின்றனர்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***